அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் : பெற்றோர் எவரேனும் இதுவரை தடுப்பூசி பெறாவிடின் இப்போதாவது பெறுங்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் - News View

Breaking

Monday, November 22, 2021

அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் : பெற்றோர் எவரேனும் இதுவரை தடுப்பூசி பெறாவிடின் இப்போதாவது பெறுங்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

(எம்.மனோசித்ரா)

காய்ச்சல், தடிமன் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், காய்ச்சல், தடிமன் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதே போன்று பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளையுடைய பெற்றோரில் எவரேனும் இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லையெனில் இப்போதாவது பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

காரணம் பெற்றோர் தடுப்பூசியைப் பெறாமல் இருப்பார்களாயின் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு அதிகமாகும். பெற்றோர் தொற்றாளர்களானால் நிச்சயம் அது குழந்தைகளையும் பாதிக்கும். எனவேதான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

எதிர்பாராத விதமாக பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், செயற்பட வேண்டிய முறைமை குறித்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி உள்ளிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கையில், பாடசாலைகளில் மாத்திரமின்றி மாணவர்கள் பாடசாலை செல்லும் போக்கு வரத்துக்களும் விசேட கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். அதிகளவான மாணவர்களை ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று பாடசாலைகளில் மாணவர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பாடசாலை நிறைவடைந்து வீட்டுக்கு வந்த பின்னரும் பிள்ளைகளின் உடல் நலம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment