முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்களை விபரிக்கிறார் வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்களை விபரிக்கிறார் வடிவேல் சுரேஷ்

(எம்.மனோசித்ரா)

சம்பள நிர்ணய சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதையடுத்து அந்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையத்தின் ஊடாக தீர்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் எடுத்துரைத்துள்ளன.

அதற்கமைய வேலை நாட்களை அதிகரித்து தொழிலாளர்களின் வேலைப்பழுவைக் குறைக்குமாறு இதன்போது வலியுறுத்தபட்டுள்ளதோடு, தொழில் பிணக்குகள் காணப்படுகின்ற இடங்களை இனங்கண்டு அவை தொடர்பில் எழுத்து மூலம் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பு முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் மங்கலயாபா தலைமையில் இடம்பெற்றது.

இதில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்களான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டு தொழிற்சங்க அமைப்பு என்பன பங்குபற்றின. அத்தோடு கம்பனிகள் சார்பில் லலித் ஒபேசேகர மற்றும் ரொஷான் ராஜதுறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிடுகையில், பெருந்தோட்ட கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் சந்திக்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கம்பனிகள், தொழிற்சங்கங்களுக்கிடையிலான சந்திப்பு முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது.

இதன்போது அண்மைக் காலமாக பெருந்தோட்டங்களில் நிலவுகின்ற அசாதாரணமான நிலைமைகளை முழுமையாக தெளிவாக நாம் எடுத்துரைத்தோம். கூட்டு ஒப்பந்தம் இல்லாமலாக்கப்பட்டு சம்பள நிர்ணய சபை மூலமாக கிடைக்கப் பெற்ற சம்பள நிர்ணயத்தின் மூலமாக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான தொழில் பிணக்குகளை பொலிஸ் நிலையத்தின் ஊடாகவே தீர்க்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றமை தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் சம்பளம் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கும் வரை காத்திருப்பதாகவும் , ஆனால் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.

அத்தோடு இது தொடர்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், எந்தெந்த பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகிறது என்பதை இனங்காண்டு அது குறித்த தகவல்களை முதலாளிமார் சம்மேளனத்தில் எழுத்து மூலமாக சமர்ப்பிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் ஊடாகவோ அரச சார்பற்ற தரப்பினர் ஊடாகவோ வெளியார் பெருந்தோட்டங்களுக்குள் உள் நுழைவதற்கு இடமளிக்கக் கூடாது என்பதையும் இதன்போது தெளிவாக எடுத்துரைத்தோம்.

எக்காரணம் கொண்டும் வெளியாருக்கு பெருந்தோட்டங்களுக்குள் நுழைவதற்கோ, காணிகளை பகிர்ந்தளிப்பதற்கோ தொழிற்சங்கவாதிகள் என்ற ரீதியில் நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறே கம்பனிகளும் அதற்கு இடமளிக்கக் கூடாது என்பதை ஸ்திரமாகத் தெரிவித்துள்ளோம்.

மேலும் வேலை நாட்களை அதிகரித்து, வேலைப்பழுவை குறைக்குமாறும் இதன்போது வலியுறுத்தினோம். காரணம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்தினருக்கும் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு இதுவே பிரதான காரணியாகும். எனவே வழமைக்கு மாறான இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் வலியுறுத்தினோம் என்றார்.

No comments:

Post a Comment