சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அவசரமாக எடுத்ததல்ல - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அவசரமாக எடுத்ததல்ல - உதய கம்மன்பில

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு மேற்கொண்ட தீர்மானம் திடீரென மேற்கொண்டதல்ல என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்து கொள்வதற்காகவே மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் இயற்கை திரவ எரிவாயு விநியோகத்தின் ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நான் ஒருபோதும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களான சமிந்திர விஜேசிறி மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்கள் தமது கேள்விகளின்போது, மசகு எண்ணெய் கொண்டுவருவதை நிறுத்தியுள்ளதால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் எரிபொருள் தொகை போதுமானதா மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்கமுடியுமா?

அத்துடன் கெரவலப்பிடிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் இயற்கை திரவ எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுத்திருக்கும் ஒப்பந்தத்தின் உண்மை நிலை என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் தொடர்ந்தும் அதற்கு பதிலளிக்கையில்; நான் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருக்கும் வரை எரிபொருள் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கப்போவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அது தொடர்பில் நான் ஏற்கனவே உறுதியளித்திருக்கின்றேன்.

அதேபோன்று யுகதனவிய மின் உற்பத்தி நிலையம் எனது அமைச்சுக்கு கீழ் வரும் நிறுவனம் ஒன்றல்ல. அதற்கு வேறு அமைச்சு இருக்கின்றது. என்றாலும் அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் அது தொடர்பில் எனது நிலைப்பாட்டை நான் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளேன். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மூவர் இணைந்து யுகதனவிய ஒப்பந்தம் தொடர்பாக தனியாக சட்டத்தரணி ஒருவரை நியமித்திருக்கின்றோம். அது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பலாம். ஏனெனில் அமைச்சரவை தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்வது சட்டமா அதிபராகும். எனினும் யுகதனவிய விடயத்தில் எமக்கு மாற்றுக்கருத்து ஏற்பட்டுள்ளதால் நாங்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளோம். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment