(இராஜதுரை ஹஷான்)
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி மின் நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் தொடர்பில் பங்காளி கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. திருட்டுத்தனமான முறையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெறவில்லை.பங்காளி கட்சியினர் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் (நேற்று) ஐந்து வருடம் பூரணமடைகின்றன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பல சவால்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபிப்பதற்கான திட்டத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிறைச்சாலையில் இருந்து வகுத்தார். கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை பல சவால்களை எதிர்கொண்டோம்.
சிறந்த திட்டமிடலுக்கமைய 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளையும் வீழ்த்தி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 70 இற்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்தது.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் 30 இற்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதுடன், பல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்துள்ளன.
2020ஆம் ஆண்டு தொடக்கம் பூகோளிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் நாட்டு மக்களையும் பாதுகாத்து, அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்கிறது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, அரசாங்கத்தை பாதுகாத்து அரசியலில் முன்னேற்றமடைய திட்டமிட்டுள்ளோம்.
சேதனப் பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் மறைந்துள்ளன. உர விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பிரித்துக் கொண்டு அரசியல் பிரசாரம் செய்கிறார்கள்.
இரசாயன உரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியினரும், சேதனப் பசளைக்கு மக்கள் விடுதலை முன்னணியினரும் எதிர்ப்பு தெரிவிப்பதை காண முடிகிறது. சேதனப் பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கை வெற்றி பெற்றுள்ளதை காண முடிகிறது. ஆகவே சேதனப் பசளைத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி மின் நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சியின் உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கான அமைச்சரவை பத்திரம் திருட்டுத்தனமான முறையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் போது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் பத்திரத்தின் உள்ளடக்கம் குறித்து நன்கு அறிந்திருந்தார்கள். அப்போது எவரும் அவ்விடயம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பங்காளி கட்சியினர் அனைவர்களுக்கும் பேச்சு சுதந்திரம் காணப்படுகிறது. அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அமைச்சரவையில் குறிப்பிடலாம் அல்லது ஆளும் தரப்பு கூட்டம், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட தெரிவிக்கலாம். அதனை விடுத்து கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுவது பொருத்தமற்றது. அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment