கினிகத்தேன, மவுன்ஜின் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அவசியம் - இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

கினிகத்தேன, மவுன்ஜின் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அவசியம் - இராதாகிருஷ்ணன்

கினிகத்தேனை மவுன்ஜின் தோட்ட மக்களின் பிரச்சினை தொடர்பாக தான் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவருடன் கலந்துரையாடி தீர்வு ஒன்றை பெற்றுத் தருவதாகவும் அவருடன் நேரடியாக தோட்ட மக்கள் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருவதாகவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (29) திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மவுன்ஜின் தோட்ட மக்களை நேரில் சந்தித்த பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த தோட்ட மக்கள் கடந்த 3 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக தோட்டத்தில் உள்ள மரங்களை நிர்வாகம் வெளியாருக்கு வெட்டி விற்பனை செய்வது, நல்ல விளைச்சலை தரக்கூடிய சுமார் 5000 ஆயிரம் தேயிலை செடிகளை வெட்டி நாசமாக்கியமை, தோட்டங்களை முறையாக பராமரிக்காமையினால் அவை காடுகளாக காட்சி அளிப்பதுடன் அவற்றில் தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலைமை அத்துடன் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 15 நாட்கள் மாத்திரம் வேலை வழங்குவதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதித்துள்ளமை உட்பட இன்னும் பல காரணங்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தான் அண்மையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகேயின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்த பொழுதும் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த இராதாகிருஷ்ணன் எம்பி, இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவருடன் நேரடியாக பேசி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு அல்லாமல் நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டு தெரிவித்தார்.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment