தடுப்பூசி ஏற்றிய அட்டையை அருகில் வைத்துக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் : முகக்கவசம் அணிவதையும் கடுமையாக செயற்படுத்த வேண்டும் - சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

தடுப்பூசி ஏற்றிய அட்டையை அருகில் வைத்துக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் : முகக்கவசம் அணிவதையும் கடுமையாக செயற்படுத்த வேண்டும் - சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணத்துக்கு இடையில் செல்லும்போது கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை வைத்துக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என ராகம வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மாகாணத்துக்கு மாகாணம் செல்லும்போது கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை வைத்துக் கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும்.

அதேபோன்று ஹோட்டல்கள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு செல்பவர்களின் கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டமையை உறுதிப்படுத்தும் கொவிட் தடுப்பூசி அட்டையை பரிசீலனை செய்வதை கட்டாயமாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த திட்டத்தை செயற்படுத்தி, அதன் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்று வருகின்றன.

அத்துடன் இவ்வாறான வேலைத்திட்டத்தை பின்பற்றி வருவதன் மூலம் கொவிட் தொற்று மாகாணத்துக்கு மாகாணம் பரவுவதை குறிப்பிடத்தக்களவில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமாகின்றது.

விசேடமாக இளைஞர்கள் தடுப்பூசி ஏற்றுவதற்கு அதன் மூலம் தூண்டப்படுகின்றனர். குறிப்பாக சர்வதே கிரிக்கெட் போட்டிகளின்போது இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, நாட்டுக்குள் கொவிட் வைரஸ் புதிய திரிபு எதிர்வரும் காலங்களிலும் பரவுவதற்கு இடமிருக்கின்றது. அதனால் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு செல்லல் மற்றும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி செல்வதன் மூலம் புதிய வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழியாகும். அதேபோன்று முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும்.

மேலும் வைத்திய நிபுணர்களின் ஆலாேசனைகளின் அடிப்படையில் புதிய சுகாதார வழிகாட்டல்களை அடிக்கடி அறிமுகப்படுத்துவது முக்கியமாகும் என்பதுடன் அந்த சுகாதார வழிகாட்டல்கள் முறையாக செயற்படுத்தப்படுகின்றதா என்பதை தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

No comments:

Post a Comment