யுகதனவிய ஒப்பந்தம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது : அரசாங்கம் எரிவாயு விநியோகிக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது - ரணில் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

யுகதனவிய ஒப்பந்தம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது : அரசாங்கம் எரிவாயு விநியோகிக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது - ரணில்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

யுகதனவிய ஒப்பந்தம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் இந்த ஒப்பந்தம் சட்டவிராேதமானது. அத்துடன் அரசாங்கம் கெரவலப்பிடியவுக்கு எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கி இருக்கின்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (13) சிறுப்புரிமை மீறல் தொடர்பான கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க முடியாது. நிலையியற் கட்டளையின் பிரகாரம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதிலளிக்க வேண்டும். அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்துக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது.

கெரவலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் என்.எப்.பி. சிறிலங்கா பவர் ஹோல்டிங் நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த ஒப்பந்தம் சட்ட ரீதியானது என சட்டமா அதிபரும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் அரசாங்கம் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் பிரதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பாக கலந்துரையாட சட்டமா அதிபர், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திறைசேரியின் செயலாளர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட வேண்டும்.

மேலும் பாராளுமன்றம் எம்மை ஏமாற்றி இருக்கின்றது. எரிவாயு விநியோகிக்க யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை என தெரிவித்திருக்கின்றது. ஆனால் ஒப்பந்தத்தில் கெரவலப்பிடிட்டியவுக்கு எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமை இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

திரவ இயற்கை எரிவாயு தேவை என்றால் இந்தியா, ஜப்பானில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுவர முடியாது. கொண்டுவருவதாக இருந்தால் கொழும்பு கெரவலப்பிட்டியவுக்கு மாத்திரமே கொண்டுவர முடியும். அப்படியானால் தனி உரிமை வழங்குவது கெரவலப்பிட்டியவுக்கு ஆகும்.

அத்துடன் யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்துக்கு திரவ இயற்கை எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவது சட்டத்துக்கு முரணாகும். அதனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும்.

கட்சித் தலைவர்களை கூட்டி இது தொடர்பாக ஆராய வேண்டும். வரவு செவு விவாதம் முடிந்த பின்னர் ஜனவரியில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறி இருக்கின்றது என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் தகவல்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால் யுகதனவிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒரு சரத்தில், இந்த ஒப்பந்தத்தை யார் கேட்டாலும் வழங்குவதில்லை என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கம் சர்வதேச ஒப்பந்தங்களை செய்யும்போது அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டும். வழங்க முடியாது என தெரிவிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment