சகல இனங்களும் சுதந்திரமாக வாழ சிங்கள மக்களது ஆதரவு அவசியம் : நல்லிணக்க ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு - News View

Breaking

Sunday, November 14, 2021

சகல இனங்களும் சுதந்திரமாக வாழ சிங்கள மக்களது ஆதரவு அவசியம் : நல்லிணக்க ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவிப்பு

சகல இன மக்களும் சுதந்திரமாக சமமாக வாழ்வதற்கு சிங்கள மக்களது ஆதரவு அவசியமென நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாட்டு தொடர்பான ஆணைக்குழுவிடம் மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் முன்னாள் போலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஆணையாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம்பெற்று வரும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் ஆகியோர் சாட்சியமளித்தனர். இதன்போதே இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மலையக மக்களின் தனித்துவமான அடிப்படை பிரச்சினைகள் என்ற ரீதியிலும் தீர்வுகளை வலியுறுத்தி ஆணைக்குழுவிடம் பூர்வாங்க அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது முன்வைக்கபட்ட சாட்சியங்கள் மற்றும் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இனியும் காலம் தாழ்த்தாமல் நிரந்தர அரசியல் தீர்வொன்று காணப்படல் வேண்டும்.

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வரும்போது இந்நாட்டின் சகல இன மக்களுக்கும் சமமான உரிமைகளும் சமூக அந்தஸ்தும் யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அதில் மலையக மக்களுக்கு தனியான தேசிய இனம் என்ற அடையாளத்துடன் அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும்.

உத்தேச தேர்தல் முறைமைகள் தொடர்பான யோசனைகளில் சிறுபான்மை சமூகங்களின் விகிதாசார, கலப்பு பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி நிர்ணயத்தில் ஜனநாயக ரீதியான அங்கத்துவம் என்பன பாரபட்சமின்றி உறுதி செய்யப்படல் அவசியம்.

இந்திய, இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் குறைந்த பட்ச தீர்வாக 13வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடன் துரிதமாக தேர்தல்களை நடாத்த வேண்டும்.

மலையக மக்களின் குடியிருப்பு, புதிய கிராமங்கள் அடிப்படையிலான வீடமைப்பு,குடிநீர் வசதி, சுகாதாரம் , போக்குவரத்து, காணி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, (தனியான பல்கலைக்கழகம்) வர்த்தகம், கைத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் சமூக நலன்கள் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவான நிரந்தர தீர்வுகள் வேண்டும்.

No comments:

Post a Comment