அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

அருட் தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை (15) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் உளடள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற ஒன்லைன் மூலமான கலந்துரையாடலில் அருட் தந்தை சிறில் காமினி உள்ளிட்டோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி CIDயில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

தற்கொலை குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த பிரதான சூத்திரதாரியனா தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) தலைவர் ஸஹ்ரான் ஹாசிமுக்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவானது, நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினரான அருட் தந்தை சிறில் காமினி கருத்து வெளியிட்டதாக, குறித்த முறைப்பாட்டில் சுரேஷ் சாலே குறிப்பிட்டுள்ளார்.

ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வளர்ப்பதில் அப்போதைய பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலே முக்கிய பங்காற்றியதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ள சுரேஷ் சாலே இவ்விடயங்களை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட் தந்தை சிறில் காமினிக்கு CID அழைப்பு விடுத்திருந்தது.

எனினும், அவருக்குப் பதிலாக அன்றைய தினம் மூன்று அருட்தந்தையர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தனர். இதன்போது வாக்குமூலம் வழங்குவதற்காக ஒருவார காலம் அவகாசம் வழங்குமாறு அருட்தந்தையர்கள் கோரியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த 03ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை (FR) மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு கடந்தவாரம் (08) பரிசீலிக்கப்பட்டபோது, அருட்தந்தை சிறில் காமினி தற்போதைக்கு கைது செய்யப்படமாட்டார் என, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அன்றையதினம் நீதிமன்றிற்கு முன்னால், அருட் தந்தைகள், அருட் சகோதரிகளால் மௌன போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment