அரசாங்கத்துடன் இருக்க முடியாது என்றால் வெளியேறிச் செல்ல வேண்டும் : மக்கள் சக்தியை ஏற்படுத்தவே பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றனர் - அமைச்சர் காமினி லாெக்குகே - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

அரசாங்கத்துடன் இருக்க முடியாது என்றால் வெளியேறிச் செல்ல வேண்டும் : மக்கள் சக்தியை ஏற்படுத்தவே பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றனர் - அமைச்சர் காமினி லாெக்குகே

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்துடன் இருக்க முடியாது என்றால் வெளியேறிச் செல்ல வேண்டும். அவர்கள் இல்லாவிட்டாலும் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் முன்னுக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என மின் சக்தி அமைச்சர் காமினி லாெக்குகே தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் 52 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு இலங்கை மின்சார சபை பிரதான அலுவலகத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் மாநாடு நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் நூறு வீதம் அமெரிக்க நிறுவனத்திடமே இருந்தது. அண்மையில்தான் அது ஜப்பான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது உதய கம்மன்பில உட்பட அவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டா இருந்தார்கள். அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான மக்கள் சக்தி ஒன்றை ஏற்படுத்தவே இவர்கள் பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றனர்.

அத்துடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 10 வீத மின்சாரத்தையே பெறுகின்றோம். 90 வீதமான மின்சாரம் மின்சார சபையில் இருந்தே பெறப்படுகின்றது. அவ்வாறு இருக்கும்போது அந்த மின் உற்பத்தி நிலையத்தை அபிவருத்தி செய்வதற்கு இவ்வாறானதொரு ஒப்பந்தத்துக்கு செல்வதில் என்ன தவறு இருக்கின்றது.

அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை தற்போது ஜப்பானுக்கு வழங்கி இருக்கின்றது. ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோன்று மின் உற்பத்திய நிலையங்களின் பங்குகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்கும்போது கேள்வி கோரல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன் கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான ஆவணங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அப்போது எதிர்ப்பு தெரிவிக்காத இவர்கள் தற்போது வெளியில் இருந்துகொண்டு பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். அதனால்தான் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.

அத்துடன் அமைச்சுப் பதவி வகிக்கும் இந்த 3 பேரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற வேண்டும். அவர்கள் இல்லை என்று அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடனே இருக்கின்றது.

நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பாக இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அமைச்சர்கள் என்ற வகையில் நாட்டின் எந்த பிரச்சினைக்கு எவ்வாறு முகம்கொடுப்பதன்றே சிந்திக்க வேண்டும். அதனையே நாங்கள் செய்கின்றோம். அவ்வாறு இல்லாமல் மக்களை உசுப்பேற்றி வீதிக்கிறக்கும் நடவடிக்கையையே இவர்கள் மேற்கொள்கின்றனர். அதனால் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிராக அவர்களுக்கு தேவை என்றால் நீதிமன்றம் செல்லலாம். இதற்கு முன்னர் இருந்த காமினி திஸாநாயக்க போன்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தபோது அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் இறுதியில் என்ன நடந்தது. அவர்களது ஆசனம் இல்லாமல்போனது.

அதனால் நாங்கள் இன்னும் அவர்களை விரட்டுவதை விட, இவர்களுடன் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். ஆனால் விரட்டப்பட வேண்டும் என அவர்கள் நினைத்தால் அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

No comments:

Post a Comment