இலங்கையில் சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும் : மீனவர்களே மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

இலங்கையில் சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும் : மீனவர்களே மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு அருகில் உருவாகியுள்ள தாழமுக்க நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே போன்று நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய காலி தொடக்கம் பொத்துவில் வரையான மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 20 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.

காங்கேசன் துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோ மீற்றர் அதிகரிக்கக் கூடும்.

அதே போன்று அந்த கடற் பரப்பில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். எனவே மீனவர்கள் மீன்பிடி செயற்பாடுகளின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment