பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து அனைத்து துறைகளையும் முன்னேற்றும் வரவு செலவுத் திட்டம் : ரோஹித்த அபேகுணவர்தன - News View

Breaking

Saturday, November 13, 2021

பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து அனைத்து துறைகளையும் முன்னேற்றும் வரவு செலவுத் திட்டம் : ரோஹித்த அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தற்காலிக நிவாரணங்களை வழங்காமல் பொதுமக்களின் மனநிலையை உணர்ந்து அனைத்து துறைகளையும் முன்னேற்றும் வரவு செலவுத் திட்டமாக இந்த முறை வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதுள்ள என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்கையில், இதற்கு முன்னர் நிதியமைச்சர்கள் 21 தடவை இந்த நாட்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளார்கள். அவர்களில் எந்த நிதியமைச்சரும் எதிர்கொள்ளாத சவால்களை தற்போதைய நிதியமைச்சர் எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் காலம் இது.

பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இந்த முறை வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ள நிலையில் பொதுமக்களின் மனநிலையை நன்கு உணர்ந்து இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் சிறந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை உற்பத்தி பொருளாதாரத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு இம்முறை கூடுதலாக நிதி ஒதுக்கி இருப்பது விசேட அம்சமாகும்.

14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளின் முன்னேற்றத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 30 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 40 லட்சம் ரூபாய் என அடிமட்டத்திலிருந்து மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் போல் அல்லது வெறுமனே நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டம் அல்லாது வழமைக்கு மாற்றமான முறையிலேயே இந்த முறை வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது. இதனை நடைமுறைப்படுத்துவதில் எமக்கு சவால்கள் ஏற்படும் என்றாலும் அந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமது அரசாங்கத்துக்கு இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment