எரிவாயு வெடிப்பு குறித்து ஆராயவும் தீர்மானம் எடுக்கவும் அவசரமாக கூடுகிறது வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

எரிவாயு வெடிப்பு குறித்து ஆராயவும் தீர்மானம் எடுக்கவும் அவசரமாக கூடுகிறது வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக்குழு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எரிவாயு கசிவு காரணமாக நாட்டில் இடம்பெறும் வெடிப்பு சம்பவங்கள் குறித்து நாட்டில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், நிலைமைகளை ஆராயவும் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கவும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டத்தை இன்று கூட்ட பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்கட்சிகள் இணங்கியுள்ளனர்.

எரிவாயு கலவை மாற்றத்தை அடுத்து பாவனைக்கு விடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கசிவை அடுத்து பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றும் சபையில் ஆளும் எதிர்க்கட்சிகள் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் பதிவாகிக் கொண்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் துரிதமாக செயற்படவில்லை எனவும், அரசாங்கத்திற்கு மாற்று வழிமுறை தெரியவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபையில் குற்றம் சுமத்தினர்.

எரிவாயு கலவையில் மாற்றங்கள் இருப்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், இது குறித்து அரசாங்கம் எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளை எடுத்தாளும் தடுக்க முடியாதுள்ளதாகவும், எனவே எதிர்க்கட்சியினரும் இதில் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சபையில் தெரிவித்தார்.

இதனை அடுத்து, இந்த அபாயகர செயற்பாடு குறித்து ஆராயவும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவும், எரிவாயு சிலிண்டர் பாவனை தொடர்பில் காணப்படும் நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்தவும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அவசர கூட்டத்தை இன்று முற்பகல் 09.00 மணிக்கு பாராளுமன்ற வாளகத்தில் கூட்டவும் சபாநாயகர் தலைமையில் ஆளும் எதிர்க்கட்சியினர் சபையில் இணங்கினர்.

இந்த கூட்டத்திற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஆய்வறிக்கைகளை முன்னெடுக்கும் நிபுணர்கள், ஆளும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் என சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் நாளைய கூட்டத்தின் பின்னர் தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து முழுமையான நடவடிக்கை எடுக்கவும் பாராளுமன்றம் இணங்கியுள்ளது.

No comments:

Post a Comment