நூல் அறுந்த பட்டம் போன்று பொருட்களின் விலை அதிகரிப்பு : நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்படும் - வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

நூல் அறுந்த பட்டம் போன்று பொருட்களின் விலை அதிகரிப்பு : நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்படும் - வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நூல் அறுபட்ட பட்டம் போன்றே நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டமும் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை அதிகரித்து செல்வது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் பொருட்களின் விலை, நூல் அறுபட்ட பட்டம் போன்று அதிகரித்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடமும் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை.

உள்நாட்டு உற்பத்தி குறைவடைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்பட்டிருப்பதாகவும் டொலர் பெறுமதி அதிகரித்திருப்பதால் பொருட்களின் விலையும் அதிகரித்து செல்கின்றது. அதனால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

மேலும் விலை கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு கடமையை முறையாக செய்வதற்கு அரசாங்கத்துக்கு விலை கட்டுப்பாடு தொடர்பில் உறுதியான கொள்கை ஒன்று இருக்க வேண்டும். அவ்வாறான உறுதியான கொள்கை அரசாங்கத்திடம் இல்லை. அதனால் விலை கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்ந்து சென்றால், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது நாடு மீண்டும் கட்டியெழுப்ப முடியாத மோசமான நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்க முடியாது போகும்.

அத்துடன் விவசாயிகளுக்கு விநியோகிக்கின்ற உரம் காரணமாக அவர்களது விவசாயம் நட்டமடைந்தால், அதற்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

விவசாயிகளுக்கு நட்டஈடாக பணம் வழங்குவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது. விவசாயிகளுக்கு தங்களது பயன்பாட்டுக்காக பெற்றுக் கொள்ள சீனி, கோதுமை மா, காஸ் போன்ற பொருட்கள் இல்லை.

அத்துடன் கையிருப்பில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரித்து, நாடு முழுமையாக பாரிய நெருக்கடிக்கு பயணித்துக் கொண்டு இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment