(இராஜதுரை ஹஷான்)
குறுகிய கால நலனையும், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலையும் இலக்காகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்தாக இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளமை, நடப்பு அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையும் என மக்கள் எதிர்பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை தேசிய மட்டத்தில் தீர்மானிக்க முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பதை எதிர்க்கட்சியினர் பிரதான அரசியல் பிரசாரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடந்த இரண்டு வருட காலமாக முழு உலகமும் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையையும், அதனால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் அவர்கள் நன்கு அறிவார்கள் ஆனால் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்கள் மத்தியில் பொய்யுரைத்துக் கொள்கிறார்கள்.
குறுகிய கால நலனையும், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் வெற்றியையும் இலக்காகக் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. நிலையான அபிவிருத்தியை அடிப்படையாக் கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
டொலர் பிரச்சினையை தீவிரமடைந்துள்ளது மறுபுறம் அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பும் வரையறுக்கப்பட்டுள்ளது அவ்வாறான நிலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அனைத்து பொருட்களையும் வரையறையில்லாமல் இறக்குமதி செய்ய முடியாது
பெரும்பாலான பொருட்களின் இறக்குமதி தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கத்தை துறந்து பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தினால் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை விளங்கிக் கொள்ள முடியும்.
மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல தற்போது ஒரு சில கடினமாக தீர்மானங்களை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
No comments:
Post a Comment