"கொலைகாரர்களுக்காக பாடாதே" - ஜஸ்டின் பீபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

"கொலைகாரர்களுக்காக பாடாதே" - ஜஸ்டின் பீபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்

சவூதி அரேபியாவில் திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு, பிரபல தனி இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜித்தாவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில், இசை நிகழ்ச்சி நடத்த உள்ள நட்சத்திரங்களில் கனடா நாட்டைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பீபரும் ஒருவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ஹாடீஜா ஜெங்கிஸ், இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதன் மூலம் "ஒரு சக்தி வாய்ந்த செய்தியை அனுப்புங்கள்" என்று பீபருக்கு வெளிப்படையாக ஓர் கடிதம் எழுதியிருந்தார்.

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "என் அன்புக்குரிய ஜமாலின் கொலைகாரர்களுக்காகப் பாடாதீர்கள்" என்று ஜெங்கிஸ் எழுதியுள்ளார்.

ஒரு காலத்தில் சவூதி அரசாங்கத்தின் ஆலோசகராகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி.

அரசின் மீதான நம்பிக்கையை இழந்ததால், சவூதியில் இருந்து வெளியேறி 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்று குடியேறினார். அப்போது முதல் சவூதி அரச குடும்ப ஆளுகையின் தீவிர விமர்சகராக கருதப்பட்ட கஷோக்ஜி, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்தான்புல்லில் உள்ள அதன் தூதரகத்தில் மிகவும் கொடூரமாக உடல்கள் துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஹேட்டிஸ் உடனான திருமணத்துக்காக சில ஆவணங்களை பெறுவதற்காக அவர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றிருந்தபோது அவர் கொல்லப்பட்டார்.

அந்த நிகழ்வை தனது கடிதத்தின் வாயிலாக நினைவு கூர்ந்த ஹாடீஜாஜெங்கிஸ், விமர்சகர்களைக் கொல்லும் ஆட்சியின் நற்பெயரை மீட்டெடுக்க, உங்களுடைய பெயரும் திறமையும் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதைக் காட்ட கிடைத்த ஒரு "தனிப்பட்ட வாய்ப்பு" இது என்று கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை சவூதி அரேபிய மனித உரிமைகள் கண்காணிப்பகமும் முன்வைத்துள்ளது.

சவூதி அரேபியாவில் நிலவும் மனித உரிமை பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாகக் கூறியுள்ள அந்த அமைப்பு, ஜஸ்டின் பீபர் உட்பட, அசாப் ராக்கி, டேவிட் கிட்டா, ஜேசன் டெருலோ ஆகிய பிற கலைஞர்களிடம், தங்கள் வருகையைத் தவிர்க்குமாறு, கேட்டுக் கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2019ஆம் ஆண்டில், ராப் இசைக் கலைஞர் நிக்கி மினாஜ், ஜித்தாவில் திட்டமிடப்பட்ட தனது நிகழ்ச்சியை, பெண்கள் மற்றும் எல்ஜிபிடி உரிமைகளுக்கான ஆதரவைக் காரணம் காட்டி ரத்து செய்தார்.

No comments:

Post a Comment