(நா.தனுஜா)
சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது நாட்டிற்கான பெரும் சாபமாக மாறியிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது மெதமுலானவில் உள்ள வீட்டின் உணவு மேசையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பது மாத்திரமன்றி பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது. மறுபுறம் அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அவர்கள் மத்தியில் உயிரச்சமும் ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக பொருளாதார ரீதியில் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தனவும் கூறியிருக்கின்றார். ஆகவே இந்நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய செயற்றிட்டங்களை முன்வைக்கப் போகின்றது என்பதை அறிந்துகொள்வதற்காக நாளையதினம் வரை காத்திருக்கின்றோம்.
நாட்டின் தேசிய வளங்களையும் பெறுமதி வாய்ந்த சொத்துக்களையும் விற்பனை செய்தல் மற்றும் கடன் பெறல் ஆகிய இரண்டுமே தற்போது பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் கொண்டிருக்கக் கூடிய இரண்டு தெரிவுகளாகும்.
இருப்பினும் இனிவரும் காலங்களில் தமது அரசாங்கம் கடன் பெறப்போவதில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் கூறுகின்றார். ஆனால் அரசாங்கம் கடன் பெறவில்லையா? அல்லது நாட்டின் தற்போதைய வங்குரோத்துநிலை காரணமாக வெளிநாடுகள் கடன் வழங்க முன்வரவில்லையா? என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது.
குறிப்பாக செலெந்திவா நிறுவனத்தின் ஊடாக நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை வெளிநாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று அரசாங்கம் கொவிட்-19 வைரஸ் பரவலை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான காரணமாகக் கூறுகின்றது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. மாறாக சீனி மோசடியினால் பெருந்தொகை நட்டம் ஏற்பட்டது.
அதேபோன்று புதிய அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டவுடன் இறக்குமதியாளர்களும் பெரு வர்த்தகர்களும் இலாபமடையக்கூடிய வகையில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
அத்தோடு 2019 ஆம் ஆண்டிலிருந்து சிகரெட்டுக்கு வரி அறவிடப்படாத போதிலும் அதன் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. எனவே அதன் மூலமான இலாபம் முழுவதுமாக சிகரெட் கம்பனிகளையே சென்றடைந்திருக்கின்றன.
அரசாங்கத்தின் இத்தகைய தூரநோக்கற்ற தீர்மானங்களின் விளைவாகப் பெருமளவான வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் பொருளாதாரமும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இரசாயன உர இறக்குமதித் தடையை அடுத்து நாடளாவிய ரீதியில் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியின் உணவுப் பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்தக் கூடாது என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார்.
எனவே நாட்டின் பல்வேறு துறைகளின் நிர்வாகத்துடன் தொடர்புடைய தீர்மானங்கள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படுகின்றனவா? அல்லது மெதமுலானவில் உள்ள வீட்டின் உணவு மேசையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக நாட்டின் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அந்த நட்டத்தை மக்கள் மீது சுமத்துவதென்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.
குறிப்பாக இன்றளவில் எயார் லங்கா நிறுவனம் 35 பில்லியன் ரூபா நட்டத்தில் இருக்கின்றது. வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோர் மாத்திரம் பயன்படுத்திய எயார் லங்கா நிறுவனத்தின் நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் சுமக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பூர்த்தி செய்யப்படவில்லை. எமக்குக் கிடைத்த தகவல்களின்படி அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறை 5 ஆம் இடத்திற்குக் கீழிறக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment