வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பாரிய சேதம் : இம்மாதத்தில் பதிவாகும் 4ஆவது வெடிப்புச் சம்பவம் : லிட்ரோ கேஸ் மீது மக்கள் விசனம், எவ்வித குறைபாடும் இல்லையென நிறுவனம் மறுப்பு : அரசாங்க பகுப்பாய்வு திணைக்களமும் மறுப்பு - News View

Breaking

Thursday, November 25, 2021

வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பாரிய சேதம் : இம்மாதத்தில் பதிவாகும் 4ஆவது வெடிப்புச் சம்பவம் : லிட்ரோ கேஸ் மீது மக்கள் விசனம், எவ்வித குறைபாடும் இல்லையென நிறுவனம் மறுப்பு : அரசாங்க பகுப்பாய்வு திணைக்களமும் மறுப்பு

கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இவ்வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (25) அதிகாலை இடம்பெற்ற இவ்வெடிப்பு சம்பவத்தில் குறித்த வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது, ஆயினும் வீட்டில் இருந்தவர்களுக்கு இதனால் எவ்வித தீங்கும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 4.00 மணியளவில் வெடிப்புச் சத்தமொன்று கேட்டதாகவும், இதனையடுத்து உடனே அறையிலிருந்து வெளியில் வராமலிருந்த பின்னர் அறையின் கதவைத் திறந்தபோது, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்திருப்பது தெரிய வந்ததாக குறித்த வீட்டில் வசிக்கும் பெண் தெரிவிக்கின்றார்.

வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்த அவர், தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென குறிப்பிட்டார்.

அந்த வகையில் இம்மாதத்தில் பதிவாகியுள்ள 4 ஆவது சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் 04ஆம் திகதி வெலிகம, கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியிருந்தது.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இரத்தினபுரியிலுள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியிருந்தது.

கடந்த நவம்பர் 20ஆம் திகதி பழைய குதிரைப்பந்தய கட்டத்தில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியிருந்தது.

அண்மையில் விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் எரிவாயுவின் தரத்தில் பிரச்சினைகள் உள்ளதாக, இது தொடர்பில் லிற்ரோ நிறுவன சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆயினும், லிற்ரோ கேஸ் நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

அண்மையில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களின் தரத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுகின்றமைக்கு காரணம், லிட்ரோ சமையல் எரிவாயுக் கலவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் ஒரு காரணமென, Dailymirror பத்திரிகையில் இன்றையதினம் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென, அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment