பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 477 குடும்பங்களைச் சேர்ந்த 1912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து பதுளை அரச அதிபரிடம் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், பதுளை மாவட்டத்தில், பதுளை, ஹாலி-எலை, எல்ல, வெலிமடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 369 வீடுகள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட 1912 பேருக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால், பசறை ஒன்பதாவது மைல் கல்லருகே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 44 வயது நபர் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு அவர் பசறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் கிராம சேவையாளர்கள் ஊடாக பாதிப்பு விபரங்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை, பெரகலை, ஹல்துமுள்ளை பகுதிகளில் பனிமூட்டங்கள் அதிகரித்திருப்பதினால், வாகன சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வாகன சாரதிகளை கேட்டுள்ளனர்.
மேலும், எல்ல - வெள்ளவாயா பிரதான பாதையில் பாரிய மண் சரிவொன்று இடம்பெற்றுள்ளது. இதனால், வாகனப் போக்கு வரத்துக்களுக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பதுளை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை விசேட நிருபர்
No comments:
Post a Comment