கிழக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 3175 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், 05 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர் எம். தௌபீக் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 222 பேரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2764 பேரும், 04 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 147 பேரும், ஒரு மரணமும் சம்பவித்துள்ளதாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 42 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது பருவகால மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைக் காலமாக டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் ஒருங்கிணைந்த டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கொழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.
வீடுகளுக்கு வரும் டெங்கொழிப்பு குழுவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)
No comments:
Post a Comment