போதைப் பொருள் விற்பனைகள் ஊடாக சொத்துக்கள் குவிப்பு : 45 பேர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : 19 பேர் முன்னணி கடத்தல் காரர்கள் - News View

Breaking

Thursday, November 4, 2021

போதைப் பொருள் விற்பனைகள் ஊடாக சொத்துக்கள் குவிப்பு : 45 பேர் தொடர்பில் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : 19 பேர் முன்னணி கடத்தல் காரர்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

போதைப் பொருள் விற்பனைகள் ஊடாக, சட்ட விரோதமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 45 பேரில் 19 பேர், முன்னணி போதைப் பொருள் கடத்தல் காரர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இந்த 45 பேரின் பெயர்கள் அடங்கிய ஆவணத்தை விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரிடம் கையளித்துள்ள நிலையிலேயே, சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவின் கீழ் செயற்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீதாலை பணிப்பாளராக கொண்ட சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தேசிய உளவுச் சேவையின் உதவியுடன் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், தற்போதும் முன்னணி போதைப் பொருள் கடத்தல் காரர்களாக அறியபப்டும் ஹரக் கட்டா, தெமட்டகொட ருவன் உள்ளிட்டோரின் சொத்துக்கள் தொடர்பில் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இடம்பெறும் இது குறித்த விசாரணைகளில், போதைப் பொருள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக சம்பாதிக்கப்பட்ட சுமார் 340 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய இவை தடைச் செய்யப்பட்டுள்ளன.

தெமட்டகொட சமிந்த
கடந்த மார்ச் மாதம் முதல் தெமட்டகொட ருவனின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யின் சட்ட விரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவு, கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வெள்ளியன்று தெமட்டகொட ருவனைக் கைது செய்தது.

தெமட்டகொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த சி.ஐ.டி. சட்ட விரோத வருமானம் ஊடாக கொள்வனவுச் செய்யப்பட்டதாக நம்பப்படும் 4 சொகுசு வாகனங்கள், ஒரு கிலோ 500 கிராம் தங்கத்தினையும் கைப்பற்றினர்.

நீதிமன்றில் ஆஜர்
இந்நிலையிலேயே தெமட்டகொட சமிந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அதனையடுத்து அவர் இன்று ( 5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள்
இந்த கைது நடவடிக்கையின் போது தெமட்டகொட சமிந்தவினுடையது என கூறப்படும் 700 இலட்சம் ரூபா பெறுமதியான ரேஞ் ரோவர் ரக ஜீப் வண்டி, 330 இலட்சம் ரூபா, 480 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன பி.எம். டப்ளியூ. ரக கார்கள், 300 இலட்சம் ரூபா பெறுமதியான ப்ராடோ ரக ஜீப் வண்டி ஆகியன கைப்பற்றப்பட்டிருந்தன. அத்துடன் 225 இலட்சம் ரூபா பெருமதியான தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட மேலுமிரு வாகனங்கள்
இந்நிலையில் இந்த விடயத்தில் சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த தொடர் விசாரணைகளில், தெமட்டகொட ருவனுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலுமிரு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 200 இலட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் ரோவர் ரக ஜீப் வண்டி, 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹொண்டா ரக் கார் ஆகியனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

தெமட்டகொட சமிந்தவின் வாகனங்கள்
இந்த நடவடிக்கையின் போது, தெமட்டகொட ருவனின் சகோதரரான, பாராத லக்ஷமன் பிரேமசந்ர கொலை வழக்கில் மரண தண்டனை கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவுக்கு சொந்தமான இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.

அவை இரண்டும் தெமட்டகொட சமிந்தவின் மனைவியான பொரளை பகுதியில் இரவு நேர கழியாட்ட விடுதி ஒன்றினை நடாத்தும் பெண்ணொருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

200 இலட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் குறூஷர் ரக வாகனம் மற்றும் இதுவரை பெறுமதி மதிப்பிடப்படாத பி.எம்.டப்ளியூ. ரக கார் ஒன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இந்நிலையில் சட்ட விரோத சொத்துக்களை கைப்பற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment