புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீர் : அரசாங்கம் 20 ஐ கொண்டு வர காட்டிய அக்கறையை இதில் காட்டவில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீர் : அரசாங்கம் 20 ஐ கொண்டு வர காட்டிய அக்கறையை இதில் காட்டவில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீர் போல காட்சியளிக்கிறது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய வகையில் குறுகிய காலத்தில் அரசியலமைப்பு ஒன்று உருவாக்குவது சாத்தியமற்றதாகும். அரசியலமைப்பில் குறைப்பாடுகள் காணப்பட்டால் அது சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

புதிய அரசியலலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது லங்கா சமசமாஜ கட்சியின் பிரதான கோரிக்கையாக காணப்படுகிறது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு ஆகிய விடயங்கள் பிரதானவையாக காணப்பட்டன.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கி 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் காட்டிய அக்கறை புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் காட்டப்படவில்லை என குறிப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர்குழு நியமிக்கப்பட்டது அக்குழுவினரது செயற்பாடுகள், மக்களின் அபிப்பிராயத்தை கோரியமை தொடர்பில் முன்னேற்றகரமாக காணப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபு இம்மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீர் போல காட்சியளிக்கிறது.

பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பினை குறுகிய காலத்தில் உருவாக்குவது சாத்தியமற்றது.

அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பு அவசரமாக உருவாக்கப்பட்டால் அது சமூக மட்டத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அரசியலமைப்பு அடிக்கடி திருத்தம் செய்யும் போது அரசியலமைப்பு மீதான மக்களின் பற்று மழுங்கடிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment