அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம் 16 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் : நுழைவது தடை செய்யப்படுமேயானால் ஒட்டு மொத்த கொழும்பு மாநகரமும் ஹைட்பார்க் மைதானமாக மாறும் - எச்சரித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம் 16 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் : நுழைவது தடை செய்யப்படுமேயானால் ஒட்டு மொத்த கொழும்பு மாநகரமும் ஹைட்பார்க் மைதானமாக மாறும் - எச்சரித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா)

அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் அதன் அடக்குமுறைகள் அனைத்தையும் கடந்து இந்தியாவின் புதுடில்லி விவசாயிகளால் சுற்றிவளைக்கப்பட்டதைப்போன்று, எதிர்வரும் செவ்வாய்கிழமை பெருந்தொகையான மக்களால் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்திற்கு வருகை தருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, அம்மைதானத்திற்குள் நுழைவது தடை செய்யப்படுமேயானால், ஒட்டு மொத்த கொழும்பு மாநகரமும் ஹைட்பார்க் மைதானமாக மாற்றப்படும் என்றும் எச்சரித்திருக்கின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள மாபெரும் மக்கள் போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று சனிக்கிழமை (13) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது, அண்மைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பினால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்திருக்கின்றது. அதனால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அரிசி, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான உரம், கிருமிநாசினி போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் காரணமாக விவசாயிகள் மிகப்பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். அதனால் நாட்டின் உணவுற்பத்தியில் வீழ்ச்சியேற்படுவதுடன் உணவுப்பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உருவாகியுள்ளன.

எனவே நாட்டு மக்களை ஒன்றுதிரட்டி, அரசாங்கம் மீதான அவர்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதற்கு நாம் திட்டமிட்டோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமை எமக்கும் பொதுமக்களுக்கும் இருக்கின்றது. ஆனால் அந்தப் போராட்டத்திற்குத் தடை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் நாளாந்தம் 200 - 300 பேர் உயிரிழந்தபோது கூட வெளியிடப்படாத வர்த்தமானி அறிவித்தல் கடந்த 9 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இது குறித்து நாங்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலரிடம் கலந்துரையாடி ஆலோசனை பெற்றிருக்கின்றோம். அதன்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

அண்மைய காலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

குறிப்பாக வெள்ளிக்கிழமை (12) ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இவற்றிலிருந்து போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கோ அல்லது சுகாதாரத் தரப்பினருக்கோ வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. அதுமாத்திரமன்றி எமது போராட்டத்தை மாத்திரமே அரசாங்கம் முடக்க நினைக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

எனவே அரசாங்கம் எத்தகைய தடைகளை ஏற்படுத்தினாலும், ஏற்கனவே கூறப்பட்டவாறு எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாபெரும் மக்கள் போராட்டத்தை நிச்சயமாக நடாத்துவோம்.

பெரும் எண்ணிக்கையானோரை ஒன்றுதிரட்டி கேட்போர் கூடத்தில் கட்சியொன்றின் சம்மேளனத்தை நடாத்தியபோது ஏன் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் கருத்திற் கொள்ளப்படவில்லை? பிறிதொரு அரசியல் கட்சியினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஏன் தடுக்கப்படவில்லை? ஆகவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 ஆம் திகதி) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பெருமளவான மக்களைத்திரட்டி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவே அரசாங்கம் கடந்த காலங்களில் கூறி வந்தது. ஆனால் எதிர்வரும் 16 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் திட்டமிட்டதையடுத்து, அரசாங்கத்திற்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் நினைவிற்கு வந்திருக்கின்றது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களை வீதிக்கு இறக்க வேண்டுமென நாம் எண்ணியதில்லை. ஆனால் நாடளாவிய ரீதியில் விவசாயிகள், ஆசிரியர்கள், வெவ்வேறு துறைசார்ந்தவர்கள் என அனைவரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அவர்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்குக் கேட்டக்கூடிய விதத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே 16 ஆம் திகதி பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள். எனவே அவர்களின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதொன்றே அரசாங்கத்தின் தெரிவாக இருக்கின்றது. ஆகையினாலேயே அனைத்து சிவில் கட்டமைப்புக்களுக்கும் அரசாங்கம் இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றது.

இருப்பினும் அதன் அடக்குமுறைகளையும் தாண்டி இந்தியாவின் புதுடில்லி விவசாயிகளால் சுற்றிவளைக்கப்பட்டதைப்போன்று, நாம் எதிர்வரும் 16 ஆம் திகதி பெருந்தொகையான மக்களுடன் வந்து கொழும்பைச் சுற்றிவளைப்போம்.

ஆகவே 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்திற்கு வருகை தருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். அம்மைதானத்திற்குள் நுழைவது தடை செய்யப்படுமானால், ஒட்டு மொத்த கொழும்பு மாநகரத்தையும் ஹைட்பார்க் மைதானமாக மாற்றுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment