'மிஹிந்து நிவஹன' திட்டம் : 124 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைப்பு - News View

Breaking

Tuesday, November 23, 2021

'மிஹிந்து நிவஹன' திட்டம் : 124 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைப்பு

புத்தசாசனத்திற்கு தனது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட 'மிஹிந்து நிவஹன' திட்டத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தேசிய விழா கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையில் புராதன வனவாச குடா விகாரையில் நேற்றுமுந்தினம் (21) நடைபெற்றது. 

இங்கு வண. கட்டுவெவே பியனந்த தேரரின் பெற்றோரின் சார்பில் அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, வீரகெட்டிய கிழக்கு (கட்டுவெவ) பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் அமைச்சர் இந்திக அனுருத்தவின் பங்களிப்புடன் நடைபெற்றது.

'மிஹிந்து நிவஹன' திட்டம் அம்பாந்தோட்டைமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 124 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் வைபவம் இங்கு பிரதானமாக இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோகனைக்கேற்ப, பௌத்த விவகார அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் இணைந்து "மிஹிந்து நிவஹன" வீடமைப்புத் திட்டத்தை நாடு பூராகவும் செயற்படுத்தி வருகிறது.

இதன் முதலாவது கட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 2000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்காக 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்‌ஷ மற்றும் உபுல் கல்ப்பதி, கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உப தலைவர் அருண தசனாயக்க, அதன் பொது முகாமையாளர் கே.ஏ. ஜானக, பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

முனீரா அபூபக்கர்

No comments:

Post a Comment