110 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜோ பைடன் : சீனா நிராகரிப்பு - News View

Breaking

Wednesday, November 24, 2021

110 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜோ பைடன் : சீனா நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பரில் நடைபெறும் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும்.

அதேநேரம் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் என்பவை அழைக்கப்படவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது.

டிசம்பர் 9-10 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநாட்டில் இஸ்ரேல் மற்றும் ஈராக் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகள் என்ற வகையில் பங்கெடுக்கும்.

அமெரிக்காவின் பாரம்பரிய அரபு நட்பு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்தான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை அழைக்கப்படவில்லை.

பிரேசிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி, ஜெய்ர் போல்சனாரோ சர்வாதிகார வளைவு கொண்டவர் என்றும் டொனால்ட் டிரம்பின் உறுதியான ஆதரவாளராகவும் விமர்சிக்கப்பட்டு வந்தவர்.

மனித உரிமைகள் பதிவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்து பதற்றம் நிலவிய போதிலும் போலந்து உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

கடுமையான தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன் தலைமையிலான ஹங்கேரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆபிரிக்காவில், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் நைஜர் ஆகியவை பட்டியலில் உள்ள நாடுகளில் உள்ளன.

No comments:

Post a Comment