தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டால் கொரோனா தொற்றிலிருந்து நிச்சயமாக விடுபட்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் - கிழக்கு, மலையக பகுதிகளில் கொவிட் கட்டுப்படுத்தல் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டால் கொரோனா தொற்றிலிருந்து நிச்சயமாக விடுபட்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் - கிழக்கு, மலையக பகுதிகளில் கொவிட் கட்டுப்படுத்தல் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் வியாழேந்திரன்

எம்.எம்.சில்வெஸ்டர்

கொவிட்-19 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்படும் பட்சத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து நிச்சயமாக விடுபட்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேண்டு‍கோளுக்கிணங்க, கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளில் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு, உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப்,றோட்டரி கழகம், எக்ஸ்பிரெஸ் நியூஸ் பேப்பர்ஸ் ஆகியன ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "கடந்த சில நாட்களாக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக எமது பின்தங்கிய கிராமங்களிலே கொவிட்-19 வைரஸ் நோய் தடுப்பு தொடர்பான ஒரு விரிவான கலந்துரையாடலை நாங்கள் மேற்கொண்டிந்தோம்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப் அமைப்பு ஆகியவற்றின் இலங்கைக்கான பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின்போது நானும் எமது அமைச்சின் செயலாளர், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்தது.

கொரோ வைரஸ் தொற்றின் முதலாம், இரண்டாம் அலைகளை சிறப்பாக எதிர்கொண்டோம். இதன்போது எமது நாட்டில் இந்த முதலாம், இரண்டாம் அலைகளை வெற்றி கண்டோம். இருந்தாலும், மூன்றாவது அலை எமது நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பெரும் சவாலை முகங்கொடுக்கின்ற வகையிலே, நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தோர், ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கூடுதலான ஒத்துழைப்பை வழங்கிருந்ததுடன், தற்போதும் வழங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த மூன்றாவது அலையை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில், பல்வேறுபட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இருந்தாலும், நாங்கள் அதில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். அந்த வகையில், எமது பின்தங்கிய கிராமிய பிரதேசங்களை மையப்படுத்திய இருப்பதால், பின்தங்கிய கிராமங்களில் வாழுகின்ற மக்களுக்கு பல்வேறுபட்ட சுகாதார துறை சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கு பல வேலைத்திட்டங்களை எமது அமைச்சின் ஊடாக உருவாக்கிக் வருகின்றோம்.

இது குறித்து உலக சுகாதார துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எமக்கு சாதகமான சமிஞ்சைகளை காட்டியுள்ளனர். இதன்படி எமது நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அவர்கள் தங்களது விரிவான சேவையை பெற்றுக்கொடுப்பார்கள் என எதிர்பார்த்துள்ளோம்.
கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றை ஒழிப்பது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை எமது அமைச்சின் ஊடாக ஆரம்பித்துள்ளோம்.

கொவிட் தொற்றை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளிகளை பின்தங்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அத்துடன், சுவரொட்டிகள், பதாதைகள், துண்டு பிரசுரங்களும் அச்சிடப்பட்டுள்ளன. கொவிட் தொற்றை ஒழிப்பதற்கு ஊடகத் துறையினரும் பாரிய சேவையாற்றி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. இந்த ‍வேலைத்திட்டத்தை பாடசாலை தொடக்கம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளன.

முன் 75 சதவீதத்துக்கும் அதிகமானர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றேன். தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்படும் பட்சத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து நிச்சியமாக விடுபட்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது" என்றார்.

இந்த நிகழ்வுக்கு பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சின் செயலாளர் டாக்டர். அமல் ஹர்ஷ டி சில்வா, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டொக்டர் அல்கா சிங், யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், எக்ஸ்பிரெஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசன் , சுகாதா அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment