க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகளை காலம் தாழ்த்தி நடத்துவதே சிறந்தது - அமைச்சர் சுசில் - News View

Breaking

Wednesday, October 6, 2021

க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகளை காலம் தாழ்த்தி நடத்துவதே சிறந்தது - அமைச்சர் சுசில்

கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளை தற்போது குறிக்கப்பட்டுள்ள திகதியில் வைக்காது காலந்தாழ்த்தி வைக்க வேண்டுமென கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் துசார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 2020ஆம் ஆண்டு 210 பாடசாலை நாட்கள் காணப்பட்டன. ஆனால் வெறும் 65 நாட்களே மாணவர்கள் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.

குறிப்பாக இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் 5 நாட்களே மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர். ஏனைய மாகாணங்களில் குறைந்தது முதலாம் தவணை வரையிலாவது மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் கல்வி பொது தராதர உயர்தர, சாதாரண தர பரீட்சைகளை குறிக்கப்பட்டுள்ள திகதிகயை விட காலந்தாழ்த்தி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

எவ்வாறாயினும் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டு காலந்தாழ்த்தி வைக்கப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்டக் கருத்து எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment