ஒன்றரை ஆண்டு காலமாக கல்வியை இழந்துள்ள மாணவர்களின் நலன் கருதி உரிய தீர்மானத்தை எடுங்கள் - அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

ஒன்றரை ஆண்டு காலமாக கல்வியை இழந்துள்ள மாணவர்களின் நலன் கருதி உரிய தீர்மானத்தை எடுங்கள் - அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்

(எம்.மனோசித்ரா)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சட்ட நடவடிக்கைகள், அடக்குமுறைகள் ஊடாக தீர்வுகாண முடியும் என்று நாம் நம்பவில்லை. ஒன்றரை ஆண்டு காலமாக கல்வியை இழந்துள்ள மாணவர்களின் நலன் கருதி உரிய தீர்மானத்தை எடுக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (19) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தின் மூலம் அனைத்தையும் செய்ய முடியும் என்று கூற முடியாது. அதன் அடிப்படையில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சட்ட நடவடிக்கைகள் மூலமான அடக்குமுறைகள் ஊடாக தீர்வு காண முடியும் என்று நாம் நம்பவில்லை. கொவிட் தொற்றின் காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக இலங்கையிலுள்ள மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் பாரதூரமாக கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் என்பன ஐ.நா.வின் அமைப்பொன்றினால் பெயரிடப்பட்டுள்ளன. இது நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி அடுத்த வாரம் சிறந்த தீர்மானமொன்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இந்த போராட்டத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதா அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கள் தோல்வியடைந்துள்ளதா என்று சிந்திக்காமல் சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு மீண்டும் கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment