சிறைவாசம் சென்று பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரரின் நியமனம் நாட்டின் மேன்மைப் பொருந்திய அரசியலமைப்பினை மலினப்படுத்தும் செயல் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

About Us

Breaking

Thursday, October 28, 2021

சிறைவாசம் சென்று பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரரின் நியமனம் நாட்டின் மேன்மைப் பொருந்திய அரசியலமைப்பினை மலினப்படுத்தும் செயல் - ரஞ்சித் மத்தும பண்டார

(இராஜதுரை ஹஷான்)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு சிறைவாசம் சென்று ஜனாதிபதி பொது மன்னிப்பின் ஊடாக விடுதலையான ஞானசாரதேரர் 'ஒரு நாடு - ஒரு சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் மேன்மைப் பொருந்திய அரசியலமைப்பினை மலினப்படுத்தும் செயற்பாடாக கருத வேண்டும். நாட்டில் தமிழர்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகத்தினர்களாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழர் பிரதிநிதிகளும், பெண் பிரதிநிதிகளும் செயலணியில் உள்வாங்கப்படாமை பாரதூரமான செயற்பாடாகும் என சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை வெளிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலுமொரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு - ஒரு சட்டம் என்பதற்காக இந்த ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளமை நகைப்புக்குரியதொரு செயலணி என குறிப்பிட வேண்டும்.

இந்த ஆணைக்குழுவின் தலைவராக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை ஆணைக்குழுவை மலினப்படுத்தும் வகையில் உள்ளது.

இனம், மதம் மற்றும் ஏனைய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரஜைகளை சட்டத்தின் முன் வேறுப்படுத்தக் கூடாது என செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை நாட்டு மக்கள் மறக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை இலக்காக்கக் கொண்டு அவர் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் மேற்கொண்ட செயற்பாடுகள் நாட்டில் ஏற்பட்ட விளைவுகளை தர்கா நகர் சம்பவத்தின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம்.

சட்டத்தின் வேறுபாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சந்தியா ஹெக்னலிகொடவை நீதிமன்றத்திற்குள் வைத்து குறிப்பிட்ட கருத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறைவாசம் சென்று பின்னர் ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையானவர்.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற கொள்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் சட்டத்தின் இருப்பிடமான அரசியலமைப்பினை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நிறைவு பெறும் தருணத்தில் இந்த ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. சுபீட்சமான எதிர்காலம் கொள்கைத் திட்டத்தில் முதலாவதாக 'ஒரு நாடு - ஒரு சட்டம்'என்ற கொள்கை குறிப்பிடப்பட்டது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை உள்ளவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமை, தமக்கு தேவையான நபர்கள் மீது உள்ள வழக்குகளை நீக்கிக் கொள்ளுதல், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கள்களை முன்னெடுத்தல், நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு வழங்கி நீதித்துறையை சவாலுக்குட்படுத்தல் ஆகியன முன்னெடுக்கப்பட்டன.

தற்போது தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்று செயற்பாடாகவே கருத வேண்டும்.

அத்துடன் நாட்டின் மொத்த சனத் தொகையில் இரண்டாவதாக அதிக சனத் தொகையினை கொண்டுள்ள தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளும், பெண் பிரதிநிதிகளும் இச்செயலணியில் உள்வாங்கப்படாமை பிறிதொரு பாரதூரமான செயற்பாடாகும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்து தவறான தீர்மானங்களை செயற்படுத்துகிறது என்பது உறுதியாகுகிறது.

No comments:

Post a Comment