தோட்ட நிர்வாகங்கள் அண்மைக் காலமாக தொழிற்சங்க சட்டங்களை மதிக்காது அப்பாவி தொழிலாளர்கள் மீது தொழிற்சங்க சட்ட வரம்புகளை மீறி உண்மைக்கு புறம்பான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொலிஸ்மா அதிபர் விக்கிரமரட்னவிடம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் மீது பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்ற வகையிலும், இராஜாங்க அமைச்சர் என்ற வகையிலும் கண்டிப்பதாக தெரிவித்தார்.
கண்டியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்னவை நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் பொலிஸ்மா அதிபரின் கண்டி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன், பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை தொழிற்சங்கங்களும், தோட்ட முகாமைத்துவ நிர்வாகமும் தொழிற்சங்க,தொழிலுறவு ரீதியாகவே தீர்க்கப்பட வேண்டும்.
தொழிற்சங்க பிணக்குகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை செய்வதனால் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்கு இடையூராக பொலிசாரின் தலையீடுகள் அதிகரித்துள்ளது.
மேலும் காலம் காலமாக தோட்டங்களில் தொழில் பிணக்குகள் ஏற்படும் போது அங்கு தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் கூடி பேசியே பிணக்குகளை தீர்க்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையிலான பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக பொலிசார் தலையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சங்க விடயத்தில் பொலிசார் தலையிடுவதை விலக்கி கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தங்களின் கவனத்திற்கு தெரிவிக்கின்றது.
தொழிலாளர்கள் பிரச்சினை தொழிற்சங்க ரீதியாகவே தீர்வுக்காணப்பட வேண்டும். அத்துடன் தொழில் உறவு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மாற்றிக் கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விலக்கியுள்ளார்.
அத்துடன் இந்திய வம்சாவளி மக்கள் சமூகத்தில் உள்ள தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகளை இலங்கை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதற்கென ஒரு விசேட திட்டத்தை கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு்ம். அத்தோடு இந்த நடவடிக்கையை பிரஜாசக்தி செயல் திட்டத்தின் ஊடாக மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய மாகணத்தில் இடம்பெற்று வருகின்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபர், கடந்த காலங்களில் மறைந்த தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் பொலிசாருக்கு பக்கப் பலமாகவே இருந்துள்ளனர். மலையக மக்களின் பாதுகாப்புக்கென பல செயற்றிட்டங்களையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர்.
No comments:
Post a Comment