(இராஜதுரை ஹஷான்)
சேதன பசளை திட்டம் தோல்வி என்பதை ஜனாதிபதியும், விவசாயத்துறை அமைச்சரும் ஏற்றுக் கொண்டு விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்கா விட்டால் பாரிய விளைவு ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், விவசாயத்துறை தொடர்பில் எவ்விதமான தூரநோக்கு சிந்தனைகளுமில்லாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதியை கடந்த ஏப்ரல் மாதம் தடை செய்தார். இதனால் ஏற்படும் விளைவுகளை அப்போதே எடுத்துரைத்தோம்.
இரசாயன உரப் பாவனை உடலாரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் நகைப்புக்குரியது.
இரசாயன உரம் தடை செய்யப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் உற்பத்திக்கு இரசாயன உரம் பாவிக்கவில்லை என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா?
இரசாயன பசளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதி இல்லை என்பதை அரசாங்கம் பகிரங்கமாக குறிப்பிட வேண்டும். அதனை விடுத்து நகைச்சுவையான காரணிகளை குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.
சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றி பெற்ற நாடுகள் ஏதும் உலகில் கிடையாது. ஆகவே சேதனப் பசளை திட்டம் தோல்வி என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் ஏற்றுக் கொண்டு விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
சேதனப் பசளையை பயன்படுத்தி நூற்றுக்கு ஒரு வீதம் வெற்றிகரமான முறையில் விவசாயம் செய்யும் சவாலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிடம் முன்வைக்கிறேன். தற்போது சேதனப் பசளை என்று குறிப்பிட்டுக் கொண்டு இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும். இந்தியாவில் விவசாயிகள் அண்மையில் முன்னெடுத்த போராட்டத்தை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment