கஞ்சிகுடியாற்றில் இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வு சட்டவிரோதமானதல்ல : விபரத்தை விளக்குகிறார் நீர்ப்பாசனப் பொறியியலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

கஞ்சிகுடியாற்றில் இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வு சட்டவிரோதமானதல்ல : விபரத்தை விளக்குகிறார் நீர்ப்பாசனப் பொறியியலாளர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான கஞ்சிகுடியாற்றில் அண்மைக் காலமாக சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு வருவதாகவும், இதனால் குளமும் சூழலும் பாதிக்கப்படுவதாகவும் மண் வளம் வேறு பகுதிகளுக்கு கொண்டு செலலப்படுவதாகவும் பரவலாக சமுகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

இது தொடர்பாக கஞ்சிகுடியாறு பாரிய நீர்ப்பாசனக் குளத்தை நிருவகித்து வருகின்ற நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தம்பிலுவில் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பா. விகர்ணனிடம் கேட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும் இம்மண் அகழ்வுக்காக முறைப்படி சட்ட ரீதியாக பெறப்பட்ட ஆவணங்களையும் அனுமதிகளையும் ஒப்பந்தங்களையும் அவர் காண்பித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, "எமது தம்பிலுவில் நீர்ப்பாசனப் பிரிவுக்குள் கஞ்சிகுடியாறுகுளம், றொட்டைக்குளம், சாகாமம் குளம், ரூபஸ்குளம் என பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. 

அவற்றில் கஞ்சிகுடியாற்றுக் குளத்திற்கு நீரைக் கொண்டுவருகின்ற ஆற்று (தாயாறு) பிரதேசத்தில் மிதமிஞ்சிய மணல் சேர்வதால் அதனை அகற்ற வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.

இந்த மண் அகழ்வை யாரும் திடுதிப்பென ஒரேநாளில் சட்ட விரோதமாக நடாத்தி விட முடியாது.

இதற்கென மண்அகழ்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச செயலகம், பிரதேச சபை, விவசாய அமைப்புகள், வன பரிபாலனத் திணைக்களம், புவிச் சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றில் முறைப்படி அனுமதி பெறப்பட்டு எம்முடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டே அகழ அனுமதிக்கப்படுகின்றது.

இம்முறை பலர் மணல் அகழ அனுமதி கோரியிருந்த போதிலும் ஆக மூன்று பேருக்கு மாத்திரமே சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டது. கஞ்சிகுடியாற்றில் மொத்தம் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியில் மண் அகழப்பட வேண்டும். அப்போதுதான் குளம் வளமாகும். சீராக வான் பாயும். மீன் வளம் பெருகும். ஆனால் தற்போது கிட்டதட்ட 1.5 கி.மீ நீளமான பகுதி வெட்டப்பட்டுள்ளது. ஆற்றின் 1 கிலோ மீற்றர் நீளமான ஆரம்ப பகுதி எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

கஞ்சிகுடியாற்றுக் குளம் 20 அடி உயரத்தைக் கொண்டது. 20 அடி நீர் வந்தால் மாத்திரமே வான் பாயும். கடந்த தடவை வான் பாயவில்லை. ஆக 18 அடியே நீர் நிரம்பியது. காரணம் இந்த மிதமிஞ்சிய மணல்.

மேலும் திருக்கோவில் பிரதேசத்திற்கு குழாய் நீர் விநியோகத்திற்காக இந்தக் குளத்திலிருந்து தண்ணீர் பெற ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குளத்தின் அணைக்கட்டை மேலும் 2 அடி உயர்த்தவுள்ளோம். எனவே வான் பாயும் வீதம் மேலும் குறையலாம். மொத்தத்தில் மிதமிஞ்சிய மணல் அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.

தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட ரீதியான மணல் அகழ்வு எம்மால் அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மணலை ஏற்றும் வாகனங்கள் வந்து போகும் பாதைகளையும் இந்த மண் அகழும் ஒபப்ந்தகாரர்களே சீராக்குவர். அதற்காக தற்சமயம் மண் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதைகளை சீராக்கியதும் பணி மேலும் ஆரம்பமாகும். 

ஆற்றின் 1 கிலோ மீற்றர் நீளமான ஆரம்ப பகுதி எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அண் அகழ்வுக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று முகவர்கள் மாதமொன்றுக்கு 2500 கியூப் அகழ்வதற்கு மொத்தமாக ஆறு மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கடந்த இரு மாதங்களுள் அந்த அளவை அடைந்துள்ளனர். இதற்கான சகல ஆவணங்களும் உள்ளன. 

மேலும் இந்த மணல் அகழ்வோர் இப்பிரதேச பொது அமைப்புகள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் மணல் உள்ளிட்ட உதவிகளை செய்யவும் முன்வர வேண்டும். 

அத்துடன் மணல் அகழ்வு நிறைவுற்றதும் பாதைகள் குண்டு குழிகள் அனைத்தும் பூரணமாக சீர் செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் அஞ்சத் தேவையில்லை. இது சட்டவிரோதமானதல்ல.

'அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிகுடியாற்றில் மிதமிஞ்சிய மணலே முறைப்படி சகல அனுமதியுடன் சட்ட ரீதியாக அகழப்படுகின்றது. இதனால் குளத்திற்கு எந்தவித பாதிப்புமில்லை' என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தம்பிலுவில் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பா.விகர்ணன் தெரிவித்தார்.

வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு நிருபர்)

No comments:

Post a Comment