சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறியுள்ளது - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - News View

Breaking

Sunday, October 10, 2021

சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறியுள்ளது - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

(எம்.ஆர்.எம்.வசீம்)

முறையான கொள்கை ஒன்று இல்லாததால் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக இலங்கை மாறி இருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

காலம் சென்ற முன்னாள் பிரதர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாடு இன்று சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக மாறி இருக்கின்றது. முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க எமது நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொண்டே அனைத்து நடவடிக்கைகயும் மேற்கொண்டு வந்திருந்தார்.

நாட்டுக்காக பல தியாகங்களை மேற்கொண்டு நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார். பண்டாரநாயக்கவின் கொள்கையையே அவர் முன்னெடுத்து சென்றார். ஆனால் இன்றைய அரசியல் நடவடிக்கைகளால் மக்களுக்கு அரசியல் கசப்பாகி இருக்கிறது. அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை.

நாட்டில் பாரியளவில் உரம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உரம் இல்லாமல் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இதற்கு விரைவாக தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் போகத்துக்கு உரம் இல்லாமல் உற்பத்திகள் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கின்றது.

என்றாலும் எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உரப் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா, சீனாவில் இருந்து உரம் கொண்டுவருவதற்கு கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து உரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்போது, ஏன் எங்களிடம் உரம் பெறுவதில்லை என சீனா கேள்வி கேட்கின்றது.

எமது உரப் பிரச்சினை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இந்தியாவும் சீனாவும் எமக்கு பலவந்தமாக எமக்கு உரம் வழங்கும் நிலைமைக்கு எமது நாடு தள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தூரநோக்கு கொண்ட கொள்கையுடன் நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதற்காக நாட்டில் இருக்கும் முன்னணி தலைவர்கள், கட்சிகள் மற்றும் ஊழல், மோசடி இல்லாத தலைவர்களை இணைத்துக் கொண்டு முறையான கொள்கையுடன் எதிர்கால பயணத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பொறுப்பு எமது தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது. அதற்காக நாங்கள் பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment