தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்தால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் : பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியில் வந்து மாறுபட்ட கருத்தை தெரிவிப்பது முற்றிலும் தவறு - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

Breaking

Wednesday, October 13, 2021

தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்தால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் : பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியில் வந்து மாறுபட்ட கருத்தை தெரிவிப்பது முற்றிலும் தவறு - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர் - அதிபர் சேவையில் சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிக்க பிரதமர் எடுத்த தீர்மானத்தை கல்வி அமைச்சர் தற்துணிவுடன் செயற்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்தால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும். பாடசாலை மூடப்பட்டுள்ளதாலும், கற்பித்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாலும் பெரும்பாலான மாணவர்கள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். இதற்கு யார் பொறுப்பு கூறுவது என அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ஆபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் 94 நாட்களாக தொடர்கிறது. இவர்களின் போராட்டத்தின் காரணமாக எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இக்காலப்பகுதியில் மாணவர்கள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளமை அறிய முடிகிறது.

ஆசிரியர் - அதிபர் சேவையில் 24 வருடகாலமாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக பல தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்தினால் மாணவ சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர்.மாணவர்களின் நலனுக்காகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண தலையிட்டுள்ளேன்.

பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆசிரியர் சங்கத்தினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் அனைவரும் உண்மையில் தொழிற்சங்கமல்ல, தங்களின் சுய தேவைக்காக ஆசிரியர் சங்கம் என அவர்கள் தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அனைத்து பிரச்சினைகளையும் எடுத்துரைத்த பிரதமர் இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டார். திறைசேரியின் அதிகாரிகளும் பிரதமரின் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்தார்கள். பிரதமர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எதனையும் தொழிற்சங்கத்தினர் அவ்விடத்தில் எதனையும் குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் வெளியில் வந்து ஊடகங்கள் மத்தியில் மாறுபட்ட கருத்தை தெரிவிப்பது முற்றிலும் தவறானது, இவ்வாறான செயற்பாடு அத்தொழிற்சங்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொழிற்சங்கத்தினர் முதலில் கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும்.

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுப்படக்கூடாது. தற்போதைய போராட்டத்தினால் தொழிற்சங்கத்தினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாணவர்கள்தான் பெரும் பாதிப்பை எதிர்கொள்வார்கள். தற்போதைய நிலை தொடர்ந்தால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும். தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் இருப்பதும் இல்லாமல் போகும்.

இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் எடுத்த தீர்மானத்தை கல்வி அமைச்சர் தற்துணிவுடன் செயற்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் ஸ்திரமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment