ஜனாதிபதி கோத்தாபயவின் தவறான தீர்மானங்களை அவர் அறியாவிடினும் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையினர் நன்கு அறிந்துள்ளார்கள் : வட மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தயார் - பி.ஹரிசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

ஜனாதிபதி கோத்தாபயவின் தவறான தீர்மானங்களை அவர் அறியாவிடினும் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையினர் நன்கு அறிந்துள்ளார்கள் : வட மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடத் தயார் - பி.ஹரிசன்

இராஜதுரை ஹஷான்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களை அவர் அறியாவிடினும் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மையின மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளார்கள். இடம்பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் தீர்மானமிக்கதாக அமையும். மாகாண சபைத் தேர்தலில் வட மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.பி.ஹரிசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோற்றம் பெறாமலிருக்க வேண்டுமாயின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். உரப் பிரச்சினைக்கு துரிதகரமாக தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் அரசாங்கம் அவற்றை பொருட்படுத்தாமல் தன்னிச்சையான முறையில் செயற்படுகிறது.

இரசாயன பசளை இறக்குமதி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயத்துறை முன்னேற்றமடையும், விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்த்தோம்.

இருப்பினும் தற்போது சீனாவிலிருந்து சேதனப் பசளை என்ற பெயரில் குப்பைகளை இறக்குமதி செய்யவும், இந்தியாவிலிந்து இரசாயன திரவ உரத்தை இறக்குமதி செய்யவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி குறிப்பிட்ட கனவு உலகம் தற்போது.கலைந்து செல்கிறது. வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாவில் ஆவது அதிகரிக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் சேதனப் பசளை உரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட உரத்தை மூன்றாவது தரப்பினரது பரிசோதனையை தொடர்ந்து நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தீர்மானம் சரியாயின் ஏன் அவருக்கு ஆதரவு வழங்கிய விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். ஜனாதிபதியின் தவறு அவருக்கு தெரியாவிடின் நாட்டு மக்கள் குறிப்பாக பெரும்பான்மை மக்கள் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

இடம் பெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும் தீர்மானமிக்கதாக அமையும். வட மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment