(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் நிலவுவது வேதனைக்குரியது என பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார் என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்கதல் சம்பதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொள்ளவும்,குண்டுத் தாக்கதலின் உண்மை காரணத்தை அறியவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கோரி பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை வத்திகானில் உள்ள பாப்பரஸ் பிரான்சிஸிற்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதத்தை புனித பாப்பரஸர் கடந்த மாதம் 29ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.
ஏப்ரல் 21 குணடுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் தற்போதைய நிலை, நியாயத்தை பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பில் ஐரோப்பியாவில் வாழும் இலங்கையர்களுக்கும், கத்தோலிக்க சபைக்கும் இடையிலான சந்திப்பு நிகழ்நிலை முறைமை ஊடாக நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பிற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை தலைமை தாங்கினார்.
மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிற்கு கடிதம் அனுப்பி வைத்தேன், இக்கடிதத்திற்கான பதிலை பாப்பரசர் அவர் கைப்பட எழுதி பதில் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'நெருங்கிய சதோதரரே, கர்தினால் பஞ்ஞாஸ்கோ நீங்கள் அனுப்பிய கடிதத்தை ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி என்னிடம் ஒப்படடைத்தார். அதில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத் தாகுதல் தொடர்பில் தற்போதைய வெளிப்படைத் தன்மையில்லாத விசாரணைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
வத்திக்கானில் உள்ள அபோஸ்தலிக தூதுவர் கடிதம் ஊடாக இவ்விடயம் குறித்து எனக்கு அறிவுறுத்தியுள்ளார். கர்தினால் அவர்களே, இந்த நிலைமை என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
நான் வாக்குறுதி வழங்குகிறேன். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நான் இவ்விடயம் குறித்து அரச செயலாளர் கர்தினாலுடன் உரையாடுவேன். எனக்கு நினைவில் உள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது கத்தோலிக்கர்கள் ஆத்திரமடையும் வகையில் செயற்படாமல் இருக்க தாங்கள் செயற்பட்ட விதம் மற்றும் அவ்வேளை இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து அவர்களுடன் நட்புறவுடன் செயற்பட்டதையும், நிலையான அமைதிக்காக தாங்கள் செயற்பட்ட விதத்தை ஒருபோதும் மறக்க முடியாது.
ஆகவே இனிவரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நல்ல விடயங்கள்தொடர்பிலும், தாங்கள் எடுக்கும் தீர்மானம் தொடர்பிலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்'. என்று அவர் குறிப்பிட்டுள்ளமை எமது போராட்டத்திற்கு பெரும் பலமாக காணப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment