ஜனாதிபதியின் கருத்து வர்த்தக மாபியாக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதை போன்று உத்வேகமளித்துள்ளது : எவ்வித திட்டமிடலுமில்லாமல் செயற்படுவதன் விளைவை ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்கொண்டுள்ளார்கள் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 24, 2021

ஜனாதிபதியின் கருத்து வர்த்தக மாபியாக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதை போன்று உத்வேகமளித்துள்ளது : எவ்வித திட்டமிடலுமில்லாமல் செயற்படுவதன் விளைவை ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்கொண்டுள்ளார்கள் - முஜிபுர் ரஹ்மான்

(இராஜதுரை ஹஷான்)

அரிசி, பருப்பு ஆகிய உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, தான் ஆட்சிக்கு வரவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்து பாரதூரமானது. அக்கருத்து வர்த்தக மாபியாக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதை போன்று உத்வேகமளித்துள்ளது. சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தை தன்னால் செயற்படுத்த முடியாது. என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள்சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும்குறிப்பிடுகையில், குறுகிய மற்றும் நீண்டகால திட்டமிடலில்லாம் இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் முழு விவசாயத்துறையும் பெரும்பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. உரப் பிரச்சினை அனைத்து வகையிலான பயிர்ச் செய்கைகளுக்கும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

இரசாயன உரம் இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்யும் தீர்மானத்தை 24 மணித்தியாலயத்திற்குள் எடுத்து, அதனை செயற்படுத்தியமை தவறான செயற்பாடாகும் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

உரம் தடை தொடர்பில் ஜனாதிபதிக்கு யார் ஆலோசனை வழங்கியது என்பதை ஆராய வேண்டும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சகல பயிர்ச் செய்கைக்கு மாத்திரம் 31 இலட்சம் லீட்டர் நெனோ-நைட்ரஜன் திரவ உரம் அவசியம் என விவசாயத்துறை அமைச்சு ஆரம்பத்தில் குறிப்பிட்டது.

1 இலட்சம் மெற்றிக் தொன் திரவ உரத்தை அவசர தேவைக்காக விமானத்தின் ஊடாக இறக்குமதி செய்வோம்.என அரசாங்கம் குறிப்பிட்டது. 55 ஆயிரம் மெற்றிக் தொன் விமானத்தின் ஊடாக கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்தே அளுத்கமகே தற்போது 25 ஆயிரம் மெற்றிக் தொன் திரவ உரம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது என குறிப்பிடுகிறார்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் ஊடாக விவசாயிகள் ஏமாற்றமடைவதை அறிய முடிகிறது. ஆளும் தரப்பினர் பாராளுமன்றிலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் வாய்க்கு வந்ததை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

எவ்விதமான திட்டமிடலுமில்லாமல் செயற்படுவதன் விளைவை ஒட்டு மொத்த விவசாயிகளும் எதிர்கொண்டுள்ளார்கள். நெனோ-நைட்ரஜன் திரவ உர இறக்குமதியிலும் முறைகேடு இடம்பெற்றுள்ளன. இந்த மோசடி தொடர்பிலான உரிய நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் முன்னெடுப்போம்.

அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு தான் இல்லை என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்து பாரதூரமானது. சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வாழக்கைச் செலவுகள் குறைவாக காணப்பட்டால் மாத்திரம்தான் மக்கள் மகிழ்வுடன் இருப்பார்கள். இது அரச தலைவரது பொறுப்பாகும்.

ஜனாதிபதியின் கருத்து அத்தியாவசிய உணவு பொருட்கள் மாபியாக்கள், மருந்து மாபியாக்களுக்கு உத்வேகம் வழங்கியுள்ளது. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கருத்து கவலைக்குரியது.

ஆட்சிக்கு வந்தபோது நாரஹேன்பிடிய மொத்த விற்பனை நிலையத்திற்கு சென்றதை ஜனாதிபதி மறந்து விட்டார். அரச நிர்வாகத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார் அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment