(இராஜதுரை ஹஷான்)
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பருவகால சீட்டு இல்லாதவர்கள் புகையிரத சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது, புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படமாட்டாது. என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர்மேலும் குறிப்பிடுகையில், புகையிரத பயணிகள்பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆகவே பருவகால அட்டை இல்லாதவர்கள் புகையிரத சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படமாட்டாது.
ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலங்களில் விநியோகிக்கப்பட்ட பருவகால சீட்டு (சீசன்) இம்மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.
அதற்கமைய மேல் மாகாணத்தில் பிரதான புகையிரத வீதியில் அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயாங்கொட, கம்பஹா மற்றும் ராகம தொடக்கம் கொழும்பு கோட்டை வரையில் 22 புகையிரத பயணங்கள் இடம்பெறும்.
களனி வழி பாதையில் அவிசாவெல்ல மற்றும் கொஸ்கம தொடக்கம் 4 புகையிரத பயணங்களும், புத்தளம் வீதியில் நீர்கொழும்பு தொடக்கம் கொச்சிக்கடை வரை 08 புகையிரத பயணங்களும், கரையோர பாதையில் அளுத்கமை, களுத்துறை, வாத்துவ, பாணந்துறை, மற்றும்மொரட்டுவ தொடக்கம் 22 புகையிரத பயணங்களும் போக்குவரத்து சேவையில் இடம்பெறும்.
அத்துடன் தென் மாகாணத்திற்குள் காலி தொடக்கம் மாத்தறை மற்றும் பெலியத்த வரை, மாத்தறை தொடக்கம் பெலியத்த வரை பயணிகள் புகையிரதங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
இதற்கு மேலதிகமாக மத்திய மாகாணத்தில் கண்டி தொடக்கம் மாத்தளை ,நாவலபிடிய நானு ஓயா, பொல்கஹாவெல மற்றும் றம்புக்கன வரை பயணிகள் புகையிரதங்கள் போக்கு வரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
No comments:
Post a Comment