மத்திய வங்கியின் ஆளுநர் மக்களுக்கு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் : நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் - கபீர் ஹாசிம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

மத்திய வங்கியின் ஆளுநர் மக்களுக்கு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் : நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் - கபீர் ஹாசிம்

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இறுதி காலாண்டில் 5 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் எவ்விதத்தில் வளர்ச்சியடையும் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டு மக்களுக்கு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். தவறான முகாமைத்துவ கொள்கையினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 6 மாத காலத்திற்கான செயற்திட்டத்தை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

வரவு செலவு திட்டம், பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும்.

வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நிதியமைச்சரின் கடமைகளை தற்போது மத்திய வங்கியின் ஆளுநர் கையில் எடுத்துள்ளார்.

பொருளாதாரம், நிதி ஸ்தீர்த்தன்மை கட்டமைப்பு தொடர்பிலான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிட்டார்.

அப்போதும் இவ்வாறே குறிப்பிட்டார் 6 மாத காலத்திற்குள் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டார். தற்போது 300 ரூபாவிற்கு கூட டொலர் பெற முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இறுதி காலாண்டில் 5 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் எவ்விதத்தில் வளர்ச்சியடையும் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டு மக்களுக்கு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. மாறாக பொருளாதாரமே பாதிக்கப்படும்.

தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். மத்திய வங்கியின் ஆளுநர் இறுதி காலாண்டில் பொருளாதாரத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க முடியும் என போலியாக அறிக்கை வெளியிடுகிறார்.

நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். நாடு அனைத்து துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற கொள்கையை மத்திய வங்கியின் ஆளுநரும், அரசாங்கமும் கைவிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment