கொரோனா தொற்றுப் பரவலுக்கும் மத்தியில் இலங்கையில், கிராமங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தமது சுயநல அரசியலுக்காக சிலர், இந்த அரசாங்கம் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
புத்தளம் தொகுதி அபிவிருத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (02) பாராளுமன்ற உறுப்பினரின் புத்தளம் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம். இன்பாஸ் மற்றும் கற்பிட்டி, புத்தளம், வன்னாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் நகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி, சுயேட்சைக் குழு சார்பில் தெரிவான மற்றும் தேசியப் பட்டியல் மூலம் தெரிவான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மேலும் கூறியதாவது, இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவலுக்கும் மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஆலோசனையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இலங்கையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு 4 மில்லியனும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு 20 மில்லியனும், ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 100 மில்லியனும் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் கற்பிட்டி, புத்தளம், வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபை மற்றும் புத்தளம் நகர சபைகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 4 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாத காரணத்தினால், எனக்கு ஒதுக்கப்படுகின்ற 100 மில்லியன் நிதியிலிருந்து தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் வழங்கவுள்ளேன்.
அத்துடன், வீதி அபிவிருத்திப் பணி தேசிய திட்டத்தின் மூலம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 500 மீற்றர் நீளமான வீதியை நிர்மாணிக்க அதற்கான நிதியும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு நகர, பிரதேச அபிவிருத்தி தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளை களைந்து அனைத்து உறுப்பினர்களுக்கு சமமான முறையில் நிதியை ஒதுக்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எமக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த அரசாங்கம் அவ்வாறுதான் மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. எனினும் ஒரு சிலரின் சுயநல அரசிலுக்காக இந்த அரசாங்கத்தை விமர்சிக்கின்றார்கள். மக்கள் மத்தியில் பிழையாக காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். குறை கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் கட்சி பார்த்து அரசியல் செய்யவில்லை. என்னிடம் பிரதேசவாதம் இல்லை. கட்சி, இனம், மதம், மொழி பார்ப்பதில்லை. என்னுடைய அலுவலகத்திற்கு யார் உதவி கேட்டு வந்தாலும் அவர் எனக்கு வாக்களித்தவரா அல்லது ஆளும் கட்சி சார்புடையவரா என்று பார்த்து பணிகளை செய்வது கிடையாது. உதவி என்று கேட்டுவருபவர்களுக்கு முடியுமான பணிகளை செய்துகொண்டிருக்கிறோம்.
இன்று புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிறைய தேவைகள் இருக்கிறது. 30 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தொகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எனவே, இந்தப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் முலம் எமது மாவட்டத்தில் வாழும் மூவின மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் எனது நோக்கமாகும்.
ஆகவே, எமது இந்த பயணத்தில் கற்பிட்டி, புத்தளம், வன்னாத்தவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் ஊரின் நன்மை கருதி அனைவரும் எம்முடன் கைகோர்க்குமாறு அன்பாக அழைப்பு விடுக்கிறேன்.
விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதில் தங்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
எனக்கு ஒரு இராஜாங்க அமைச்சு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். ஆனாலும், அமைச்சர் பதவி இன்றி, என்னுடைய மாவட்ட மக்களுக்கு பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருக்கிறேன். எனினும், ஒரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டால் இன்னும் பல சேவைகளை மக்களுக்கு செய்ய முடியும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment