இலங்கையில் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படுகின்றன : விரிவாக ஆவணப்படுத்தியுள்ள 'சிவிக்கஸ் மொனிட்டர்' அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

இலங்கையில் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படுகின்றன : விரிவாக ஆவணப்படுத்தியுள்ள 'சிவிக்கஸ் மொனிட்டர்' அமைப்பு

(நா.தனுஜா)


இலங்கையில் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தினால் முடக்கப்படல், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படல், பொலிஸ் தடுப்புக் காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள்,பயங்கரவாத தடைச் சட்டத்தின் முறையற்ற பிரயோகம் உள்ளடங்கலாக அண்மைக் காலத்தில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான இடைவெளியில் ஏற்பட்டுள்ள சுருக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் 'சிவிக்கஸ் மொனிட்டர்' அமைப்பு விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கை தளமாகக் கொண்டு இயங்கி வரும் 'சிவிக்கஸ் மொனிட்டர்' என்ற அமைப்பானது சர்வதேச ரீதியில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு காணப்படும் சுதந்திரம் தொடர்பான ஆய்வுகளை மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைய காலத்தில் இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளின் நிலைவரம் தொடர்பில் அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அவசரகாலச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அச்சட்டம் பிறப்பிக்கப்படுவதாகக் காரணம் கூறப்பட்டது.

இருப்பினும் அதனைச் செய்வதற்கு அவசியமான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதனால் அவசரகாலச் சட்டம் அவசியமற்றது என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற கரிசனைகளும் முன்வைக்கப்பட்டன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் பிடியாணையின்றி நபர்களைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கும் எந்தவொரு கட்டடத்திற்குள் நுழைந்து தேடுதல்களை மேற்கொள்வதற்கும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கும் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாத கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கும் உரிய அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வெளியிட்ட உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், காணாமல் போனோரின் குடும்பத்தினர் ஆகியோர் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அடக்குமுறைகள் என்பன தற்போது மாணவர்கள், புத்திஜீவிகள், மருத்துவத்துறைசார் நிபுணர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் வரை விரிவடைந்துள்ளதாகக்கூறி, அது குறித்துத் தனது கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமாத்திரமன்றி அமைதி வழிப் போராட்டங்கள் மற்றும் நினைவு கூரல்களில் கலந்து கொண்டவர்கள் மீது அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நபர்கள் தன்னிச்சையாகக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை குறித்து விசனத்தையும் வெளியிட்டிருந்தார்.

அண்மையில் கல்விசார் உரிமைகளைக் கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தினால் அடக்கப்பட்டதுடன் அரசாங்கத்தை விமர்சித்த தனி நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பொலிஸ் காவலின் கீழுள்ள அரசியல் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

பாராளுமன்றத்திற்கு அண்மையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைதி வழிப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கோஷிலா ஹன்சமாலி பெரேரா, தொழிலாளர் போராட்ட நிலையத்தைச் சேர்ந்த சமீர கொஸ்வத்த, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் அமில சந்தீப, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் ஹேஷான் ஹர்ஷன மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தலைவர் உள்ளிட்ட 5 செயற்பாட்டாளர்கள் இன்னமும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸ் அதிகாரியொருவரின் விரலில் காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் கொவிட்-19 சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியமை ஆகியவையே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.

கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

இதே விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றிச் சென்றமை மற்றும் அவர்களுக்கான ஒலி பெருக்கி வசதிகளை வழங்கியமைக்காக 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதுமாத்திரமன்றி மாணவர் ஒன்றியத் தலைவர்கள், பல்கலைக்கழகக் கல்விசார் ஊழியர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளடங்கலாக மேலும் 11 பேரின் பெயர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி தலங்கம பொலிஸாரால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவர்களைக் கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்படாத நிலையிலும் பல்வேறுமுறை அவர்களது வீடுகளுக்கு விஜயம் செய்தல், தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளின் ஊடாக அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். 

அதுமாத்திரமன்றி சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது 36 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 44 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள்.

அதேபோன்று 2009 இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவு கூரும் வகையில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி கல்குடாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் கடந்து கொண்ட 10 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை தடுத்து வைப்பதற்கான உத்தரவு கடந்த ஜுலை 29 ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகாரம், கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்த ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், சமூக வலைத்தளப் பயனாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராகவும் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை அச்சுறுத்தியிருக்கின்றது.

கொவிட்-19 பரிசோதனை உபகரணங்களின் அதிக விலை தொடர்பில் தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதற்கு முன்னர் அதிக கொவிட -19 வைரஸ் தொற்றாளர்களினால் அவிசாளை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் நஜித் இந்திகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீம் ஆகியோர் தற்போதுவ ரை தடுத்து வைக்கப்பட்டிருத்தல், ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல், அண்மையில் இரண்டு சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியைக் காண்பித்து அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதுடன் அவர்களை மண்டியிடச் செய்தமை, வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டமை உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேலும் பல நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment