சிறிமாவின் ஆட்சி மேலும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்திருந்தால் வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நிலைக்கு இலங்கை மாறி இருக்கும் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

சிறிமாவின் ஆட்சி மேலும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்திருந்தால் வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நிலைக்கு இலங்கை மாறி இருக்கும் - மஹிந்த அமரவீர

(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறிமா பண்டாரநாயக்க இன்னும் இரண்டு வருடங்கள் நாட்டை ஆட்சி செய்திருந்தால் எமது நாடு வெளிநாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக விளங்கி இருக்கும். அவரின் கொள்கைகளை தற்போதுதான் மக்கள் உணர்கின்றனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

காலம் சென்ற முன்னாள் பிரதர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க எதிர்கால திட்டத்துடனே நாட்டை ஆட்சி செய்துவந்தார். சர்வதேச நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வந்தார்.

சீனா போன்ற நாடுகள் இன்றும் அம்மையாரை நினைவுகூறி வருகின்றன. நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வெளிநாட்டு கொள்கையே பின்பற்றி வந்தார்.

அத்துடன் இன்று நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையால் மக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ள வீதியில் வரிசையில் இருக்கும்போது அம்மையாரையே அனைவரும் நினைவு படுத்துகின்றனர்.

ஆனால் சிறிமா அம்மையார் அன்று பின்பற்றிய கொள்கையை தொடர்ந்து இன்னும் இரண்டு வருடங்களாவது கொண்டு செல்ல சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், நாடு பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்திருக்கும். நாங்கள் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற வேண்டி இருக்காது. மாறாக வெளிநாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்கும் நாடாக இருந்திருக்கும்.

மேலும் சிறிமா அம்மையார் ஒருபோதும் இனவாதத்தை அனுமதிக்கவில்லை. அதனால்தான் சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தனர். அந்த வரலாறே எமது கட்சிக்கு இருக்கின்றது. அத்துடன் அவர் சர்வதேசத்தை வெற்றி கொண்டிருந்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதனாலேயே அவருக்கு அதனை மேற்கொள்ள முடிந்தது. சிறிமா அம்மையாருக்கு பிறகு சர்வதேசத்தை வெற்றி கொண்ட தலைவர் எமது கட்சியின் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்து ஜீ 8 மாநாட்டுக்கு சென்றபோது சர்வதேச தலைவர்கள் அவரை சந்திப்பதற்கு வரிசையில் இருந்தார்கள். சர்வதேச தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அதனால் அன்று எமது நாட்டுக்கு ஐராேப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன. ஐராேப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்ய முடியுமாக இருப்பதும் மைத்திரிபால சிறிசேன மீது சர்வதேசத்துக்கு இருந்த நம்பிக்கையாகும் என்றார்.

No comments:

Post a Comment