தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தாலும் எமது சமூகத்தை பாதிக்கும் விடயங்களை தோற்கடிக்க நான் பின் நின்றதில்லை - மர்ஜான் பளீல் - News View

Breaking

Tuesday, October 5, 2021

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தாலும் எமது சமூகத்தை பாதிக்கும் விடயங்களை தோற்கடிக்க நான் பின் நின்றதில்லை - மர்ஜான் பளீல்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதாக இரட்டை வேடம் போடும் நபர்கள் தமது நோக்கம் நிறைவேறிய பின்னர் நீயாரோ நான் யாரோ என்று இருந்து விடுவார்கள். அவர்கள் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள் கீழ் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடாகும். ஒருவருக்கு ஒருவர் உதவி இணைந்து வாழ்வதிலே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது. இதனை வாய்ப் பேச்சில் மாத்திரம் பேசும் கீழ்த்தரமான அரசியல்வாதியாக அன்றி நான் செயலிலும் காட்டி வருகிறேன்.

தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தாலும் எமது சமூகத்தை பாதிக்கும் விடயங்களை தோற்கடிக்க நான் பின் நின்றதில்லை. எதிர்காலத்திலும் பின்நிற்க மாட்டேன்.

இனவாதம் பேசியவர்களுக்கு எதிராக பேசுவதாக அதனை அரசியலாக்கி பாராளுமன்றத்தில் என்னை பேச்சாளராக காட்டிக் கொள்ளும் தேவை எனக்கு கிடையாது. பேச்சாளனாக செயற்பட நான் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் வரவில்லை. சவால்களை வென்றெடுக்கவே எனது கவனத்தை செலுத்துகிறேன்.

மேலும் எமது சமூகத்திற்கு சவாலான விடயங்களை பேசி ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக சிலர் பாராளுமன்றத்தில் வீரவசனம் பேசுவதை கண்டுள்ளேன். அவர்களது சந்தர்ப்பவாத அரசியலை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அது இனவாதமும் சந்தர்ப்பவாதமும் தான். அவர்கள் பேச்சு வீரர்களன்றி தீர்வை பெற்றுத் தருபவர்களல்லர். அவர்கள் பிரச்சினைகள் தொடர்ந்திருப்பதை விரும்புபவர்களாகும். அவர்களின் அரசியல் பிழைப்பு இவ்வாறான விடயங்களை பேசுவதிலே தங்கியுள்ளது. எமது நாடு இனவாதத்தை புறந்தள்ளி வெகு நாட்களாகிறது.

கொரோனா ஜனாஸாவினால் வைரஸ் பரவாது என்று எம்முடன் குரல் கொடுத்து தமது பிரதேசத்தில் ஜனாஸாக்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக இரட்டை வேடம் காட்டி அரசியல் செய்யும் ஓநாய்கள்தான் இவர்கள்.

இன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுபவர்கள் தமது நோக்கம் நிறைவேறிய பின்னர் நீயாரோ நான் யாரோ என்று இருந்து விடுவார்கள். சமூகத்திற்கு சவாலாக விடயங்களை வென்றெடுத்தோம். இவற்றுக்கு ஜனாபதியும் பிரதமரும் பக்கபலமாக இருந்துள்ளனர். தொடர்ந்து இருப்பார்கள்.

எனது இறைவனுக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஏதும் அவதூறு பேசப்படுமானால் அது தொடர்பில் வேதனையை வெளிக்காட்டும் ஒழுங்கும் உரிமையும் எங்களைவிட வேறு யாருக்கும் இருக்காது. அவ்வாறு குரல் கொடுப்போரை குறைத்து மதிப்பிட மாட்டோம். முதலை கண்ணீருக்கும் ஓநாய் தந்திரத்திற்கும் எமது சமூகம் மயங்காது என்றார்.

No comments:

Post a Comment