குறைபாடுகளை திருத்துவதை விடுத்து பங்காளி கட்சிகளை எதிரிகளை போன்று பார்த்தால் முழு அரசாங்கமும் பாதிக்கப்படும் - வாசுதேவ நாணயக்கார - News View

Breaking

Wednesday, October 20, 2021

குறைபாடுகளை திருத்துவதை விடுத்து பங்காளி கட்சிகளை எதிரிகளை போன்று பார்த்தால் முழு அரசாங்கமும் பாதிக்கப்படும் - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

கூட்டணியாக ஒன்றிணைந்துள்ள போது அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு. அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் குறைகளை சுட்டிக்காட்டவில்லை. மக்களின் பிரநிதி என்ற ரீதியில் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பங்காளி கட்சிகளுக்கு உண்டு என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு.

யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் வாய்ப்பு கோரியிருந்த நிலையில் அது மறுக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தும்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படவில்லை. ஒரு சில தீர்மானங்கள் தவறானதாக காணப்படுகிறது. அதனை திருத்திக் கொள்வதற்காகவே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். குறைபாடுகளை திருத்துவதை விடுத்து பங்காளி கட்சிகளை எதிரிகளை போன்று பார்த்தால் முழு அரசாங்கமும் பாதிக்கப்படும்.

யுகதனவி மின் நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

யுகதனவி விவகாரம் தொடர்பில் பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பல சந்தேகம் எழுந்துள்ளன. கடந்த அரசாங்கம் செய்த தவறை தற்போதைய அரசாங்கமும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. தேர்தல் முறைமையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தல் தீர்மானமிக்கதாக அமையும்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டம் குறித்து ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளது.என்றார்.

No comments:

Post a Comment