(எம்.மனோசித்ரா)
உலகில் சில நாடுகள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சையை புறக்கணித்த போதிலும், இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறு செயற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உலகில் சில நாடுகள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சையை புறக்கணித்த போதிலும், இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறு செயற்படவில்லை.
சில நாடுகள் அவ்வாறு செயற்பட்டமையால் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் வீதம் அதிகமாகக் காணப்பட்டது. எனினும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முறையான வேலைத்திட்டங்களின் காரணமாக கொவிட் தொற்றினை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்தது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமையின் காரணமாக நோயாளர்கள் அநாவசிய நெருக்கடிகளுக்கு உள்ளாகுதல் தவிர்க்கப்பட்டது. இவ்வாறு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்ப்பட்டவர்களில் 1.4 சதவீதமானோரை மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
தற்போது இலங்கையில் கொவிட் பரவல் நிலைமை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இதற்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றன. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் அதேவேளை நோயாளர்களின் உடல் மற்றும் உள நலத்தினை பாதுகாப்பதற்கும் சுகாதார தரப்பினர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினர் என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி , தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். வெற்றிகரமான கொவிட் கட்டுப்படுத்தலுடன் சிறுவர்களின் போசாக்கு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment