துறைமுகத்தில் தேங்கியிருக்கும் பால்மாவை வெளியில் கொண்டு வர முடியும், டொலர் அதிகரித்தால் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

துறைமுகத்தில் தேங்கியிருக்கும் பால்மாவை வெளியில் கொண்டு வர முடியும், டொலர் அதிகரித்தால் விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

துறைமுகத்தில் தேங்கி இருக்கும் 360 மெட்ரிக் தொன் பால்மா தொகையை விடுவித்துக் கொள்ள தேவையான டொலர்களை இன்றைய தினத்துக்குள் வர்த்தக வங்கிகளுக்கு வைப்பிலிடுவதாக மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. அதன் பிரகாரம் செவ்வாய்க்கிழமைக்கு பால்மா தொகையை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும் என பால்மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் தேங்கி இருக்கும் பால்மா தொகையை வெளிநாடு ஒன்றுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், துறைமுகத்தில் தேங்கி இருக்கின்ற பால்மா தொகையை விடுவித்துக் கொள்வதற்கு தேவையான டொலர்களை விடுவிப்பதாக இலங்கை மத்திய வங்கி கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்த போதும். நேற்று வரை வர்த்தக வங்கிகளுக்கு டொலர்கள் விடுவிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகை பழுதடையும் அபாயம் இருக்கின்றபடியால் அருகில் இருக்கும் வெளிநாடு ஒன்றுக்கு வழங்குவதற்கு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடி இருந்தோம்.

இந்நிலையில் மத்திய வங்கியுடன் இன்று கலந்துரையாடியபோது இன்றைய தினத்துக்குள் தேவையான டொலர்களை எமது வங்கிகளுக்கு விடுவிப்பதாக வங்கி உறுதியளித்தது. அதன் பிரகாரம் பெரும்பாலும் இன்றையதினம் டொலர்கள் கிடைக்கும் இல்லாவிட்டால் திங்கட்கிழமை கிடைக்கும். தேவையான டொலர்கள் கிடைத்ததுடன் செவ்வாய்க்கிழமைக்கு துறைமுகத்தில் இருக்கும் 360 மெட்ரிக் தொன் பால்மா அடங்கிய 16 கொள்களன்களை வெளியில் எடுத்துக் கொள்ள முடியும்.

அத்துடன் பால்மா உற்பத்தி செய்து 12 மாதங்கள் வரை பழுதடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது துறைமுக்கத்தில் 50 நாட்களாக பால்மா தொகை தேங்கி இருக்கின்றது. துறைமுகத்தில் இருக்கும் பால்மா தொகை அடங்கிய கொள்களன்கள் எந்த அமைப்பில் இருக்கின்றன என்று தெரியாது. உயர்ந்த இடத்தில் இருந்தால் அதிக வெப்பம் காரணமாக பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

அத்துடன் மத்திய வங்கி டொலர் ஒன்றை 203 ரூபாவுக்கே விநியோகின்றது. அதனால் தற்போதைக்கு பால்மா விலை அதிகரிக்கப்படமாட்டாது. டொலர் விலை அதிகரித்தால் பால்மா விலை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது போகும் என்றார்.

No comments:

Post a Comment