இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து குறித்த விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக இந்தியா ருடே மற்றும் த டைம்ஸ் ஒப் இண்டியா ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த பயணம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸி ரத்நாயக்கவிடத்தில் வினவியபோது, தற்போது வரையில் அவ்விதமான நிகழ்ச்சி நிரல் ஒன்றும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், இந்திய தூதரகத் தகவல்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் இலங்கையிலிருந்து உத்தரப் பிரதேச விமான நிலைய அங்குராடர்ப்பணத்திற்கு விசேட குழுவினருடன் விமானமொன்று செல்லவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் அதில் பயணிப்பவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேசரி
No comments:
Post a Comment