மடு தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி : இன்று பொருட்களின் விலையை தீர்மானிப்பது நிறுவனங்கள், அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - காவிந்த ஜயவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

மடு தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் முயற்சி : இன்று பொருட்களின் விலையை தீர்மானிப்பது நிறுவனங்கள், அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - காவிந்த ஜயவர்த்தன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மன்னார் மடு தேவாலயத்துக்கு உரித்தான சொத்துக்களை பலாத்காரமாக கைப்பற்ற ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார். அவருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ( 8) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பாரிய பொருளாதார பிரச்சினைய எதிர்கொண்டுள்ளது. அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பதென்று அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசையில் இருக்க வேண்டி இருக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை இறக்குதி செய்வதற்கு டொலர் இல்லை.

இவ்வாறான நிலையில் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை இதுவரை முன்வைக்கவில்லை. பால்மா, காஸ், சீனி கொள்வனவு செய்து கொள்ள மக்களை வீதியில் நீண்ட நேரம் நிற்க வைத்திருப்பது குறித்து நாடு என்ற வகையில் நாங்கள் வெட்கப்பட வேண்டும்.

அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள இந்த அரசாங்கத்து இன்று அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இன்று பொருட்களின் விலையை தீர்மானிப்பது நிறுவனங்களாகும். அரசாங்கத்துக்கு அதனை தடுக்க முடியாத நிலை. அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். 18.3 மந்தபோஷனம் உள்ள சிறுவர்கள் இருக்கும் நாட்டில், அந்த பிள்ளைகளுக்கு பால்மாவைக்கூட வழங்க முடியாமல் இருக்கின்றது. அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கோரும்போது, அந்த மக்களை விசாணைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதேபோன்று ஞானசார தேரர் மன்னார் மடு தேவாலயத்துக்கு சென்று மீண்டும் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். மடு தேவாலயத்தின் காணிகளை பலாத்காரமாக பெற்றுக் கொள்ள முற்படுகின்றார்.

நாட்டில் கடந்த காலங்களில் சிங்கள, தமிழ் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள், சிங்கள, முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். இப்போது சிங்கள, கத்தோலிக்க பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளி்க்கக் கூடாது.

எனவே மடு தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துக்களை பலாத்காரமாக கைபற்றிக் கொள்ள ஞானசார தேரர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார். உடனடியாக அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment