பிரெக்சிட் சர்ச்சை : பிரிட்டனின் படகை கைப்பற்றியது பிரான்ஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, October 29, 2021

பிரெக்சிட் சர்ச்சை : பிரிட்டனின் படகை கைப்பற்றியது பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியதற்கு பின்னரான மீன்பிடி உரிமை தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் பிரிட்டனின் இழுவைப் படகு ஒன்றை கைப்பற்றி இருக்கும் பிரான்ஸ் மற்றொரு படகின் மீது அபராதம் விதித்துள்ளது.

லே ஹவ்ரேவில் வெள்ளிக்கிழமை (29) இரவில் இடம்பெற்ற சோதனையின்போது இந்த படகுகள் எச்சரிக்கப்பட்டதாக பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் அன்னிக் கிரார்டி குறிப்பிட்டுள்ளார்.

முதலில் உத்தரவுக்கு உடன் கட்டுப்படவில்லை என்பதோடு இரண்டாவது பிரான்ஸ் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

துறைமுகங்களில் பிரிட்டன் படகுகளை முடக்குவதாக பிரான்ஸ் விடுத்த எச்சரிக்கை ஏமாற்றம் தருவதாக பிரிட்டனின் பிரெக்சிட் அமைச்சர் லோர்ட் ப்ரொஸ்ட் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார். 

முறையான உரிமம் பெறாது சீன் கூடாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பிரிட்டன் இழிவைப்படகு சிக்கியதாக கிரார்டி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் படகு லே ஹவ்ரே துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு நீதித்துறை நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைப்புத் தொகையை செலுத்தும் வரை படகு தடுத்து வைக்கப்படும் என்றார்.

அந்த படகின் தலைமை மாலுமி அபராதம் மற்றும் தடைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் சோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மற்றொரு படகு மீது அபராதம் விதிக்கப்பட்டதாக கிரார்டி மேலும் தெரிவித்தார்.

பிரெக்சிட்டுக்கு பின்னரான பிரச்சினையாக உள்ள மீன்பிடி உரிமம் வழங்கும் விவகாரத்திற்கு நவம்பர் 2 இற்குள் தீர்வு கிடைக்கா விட்டால் சில துறைமுகங்களில் பிரிட்டன் படகுகளை முடக்குவதாகவும் பிரிட்டன் படகுகள் மற்றும் டிரக்குகளுக்கான சோதனைகளை தீவிரப்படுத்துவதாகவும் பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

பிரான்ஸின் இந்த எச்சரிக்கை ஏற்றத்தாழ்வு உடையது என்றும் சர்வதேச சட்டம் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை மீறுவதாக இருப்பதாகவும் பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment