அட்டாளைச்சேனை சுகாதார பிரிவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் - News View

Breaking

Tuesday, October 19, 2021

அட்டாளைச்சேனை சுகாதார பிரிவில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் ஒலுவில், அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பிரதேசங்கள் அதிகமாக டெங்குநோய் பரவக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவ் இடங்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வாரகாலத்திற்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் டெங்கொழிப்பு செயலணி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கு விஜயம் செய்து டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை பரிசோதனை செய்து வருகின்றனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர், சமூக மட்டத் தலைவர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுககளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட்டு குறித்த இடங்களை டெங்கு நுளம்புகள் அற்ற இடங்களாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment